சூர்யாவிற்காக சென்னையில் ஒரு அம்பா சமுத்திரம்!

News

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேக வேகமாக நடைபெற்று வருகிறது. “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் சூரியாவுடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு இப்போது முடிவடைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறார்.

முக்கியமாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய ஊர்களில் ஒன்றான அம்பாசமுத்திரம் போலவே சென்னையில் செட் அமைத்து வருகிறார்கள். இதற்காக அம்பாசமுத்திரம் நகரை அப்படியே வடிவமைத்திருக்கிறாராம் கலை இயக்குநர் ஆர்.கே.விஜய முருகன் . அங்கிருப்பது போன்றே வீடுகள், கோயில்கள் மற்றும் பசுமையான வயல்வெளிகளை தத்ரூபமாக உருவாக்கி வருகிறார்களாம்.

இந்த செட்டில் சூர்யா, ரகுல் பிரீத் மற்றும் சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க இருக்கிறார்களாம். தொடர்ந்து 20 நாட்களுக்கு இந்த “அம்பாசமுத்திரம்” செட்டில் படப்பிடிப்பு நடக்கும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.

இப்படத்திற்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.