‘அழகிய அசுரா’ என்ற படம் மூலம் நடிராக அறிமுகமானவர் கிரிஷ். இதில் கதாநாயகனுக்கு நண்பராக கிரிஷ் நடித்திருந்தார். பின்னர், கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ‘மஞ்சள் வெயில்’ பாடலை பாடியதன் மூலம் சிங்கராக அறிமுகமானார்.
இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகவே தொடர்ந்து பல பாடல்களை பாடி வந்தார். பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவர், ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படம் மூலம் கதாநாயகனாக மாறினார். பின்னர், சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். நடிகர், பாடகர் என பிரபலமான கிரிஷ் தற்போது ஒருசில படங்களுக்கு இசையமைத்தும்
வருகிறார்.
இந்நிலையில், கிரிஷ் இசையமைப்பில் தற்போது முருகனின் அறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து, ‘வெற்றி வேலா’ என்ற இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதனை சூர்யா வெளியிட்டார். இது குறித்து, கிரிஷ் கூறியதாவது: “முருகனுக்கு, ‘ரொமாண்டிக்’ பாடல் இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி தான் இந்த இசை ஆல்பம் இருக்கும். முருகனின் அறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து, பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்துார், சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என 6 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்று உள்ளன” என அவர் கூறினார்.