தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், அன்னை ஃப்லிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ”நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசிய போது,
“நான் மகான் அல்ல” திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதைப் போலவே இந்த திரைப்படமும் எனக்கு வற்றிப்படமாக அமையும். டி.இமான் அண்ணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கின்றன.
நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும், தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன்.
ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. அதன் பிறகு இப்போது தான் சந்தீப்புடன் இணைந்துள்ளேன்.
எப்படி தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி சென்டர் நாயகர்களாக விளங்குகிறார்களோ, அதுபோல் சந்தீப் நிச்சயமாக வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாகவே அனைவரையும் சென்றடைய முடியும். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.