full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இவர்களையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய அவமானமாக உள்ளது : டி ராஜேந்தர்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிஏ அருள்பதி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.

தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி ராஜகோபாலன், பொருளாளர் பதவிக்கு பாபுராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் நிற்கின்றனர்.

இந்த அணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார் கலைப்புலி தாணு, டி சிவா, டி ராஜேந்தர், மதுரை அன்புசெழியன் உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள்.

இதுகுறித்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலைப்புலி தாணு பேசுகையில், “அருள்பதி நியாயமானவர். நீண்ட காலம் சங்கத்தை திறம்பட நடத்தியுள்ளார். விநியோகஸ்தர்கள் பிரச்சினை புரிந்தவர். அவர் தலைவராக வருவதுதான் நியாயம். அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர். அதை விட்டுவிட்டு இந்த சங்கத்துக்கு வருகிறார் என்றால் அதில் நிச்சயம் சுயநலமும் உள்நோக்கமும் உள்ளது. அவர் நிறைய படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை அவர் கவனிக்கட்டும். நான் விநியோகஸ்தராக வாழ்க்கையை ஆரம்பித்தவன். இந்த சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவன். இந்த சங்கத்துக்கு அருள்பதி தலைவராகத் தொடர்வதுதான் திரைத்துறைக்கு நல்லது,” என்றார்.

எஸ் வி சேகர் பேசும் போது, “ஆர் கே நகர் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்பது பற்றிப் பேசும் தகுதியே நமக்கெல்லாம் இல்லை. அதுவாவது அரசியல் தேர்தல். ஆனால் இங்கே நடக்கும் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தலில் பணமும் தங்க காசும் தருகிறார்கள் எதிர் அணியினர். இவ்வளவு செலவு செய்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த பதவியில் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இந்தத் தேர்தலில் அருள்பதிதான் வெற்றிப் பெற வேண்டும். அப்போதுதான் இந்த அமைப்பு சரியான பாதையில் செல்லும். ஞானவேல் ராஜா போன்றவர்களை அனுமதிக்காதீர்கள்.” என்றார்.

டி ராஜேந்தர், “எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று பெரும் முதல்வர்களுடன் அரசியல் செய்த நான், இப்போது ஞானவேல் ராஜா போன்றவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளதே என்பதை நினைக்கும்போது அவமானமாக உள்ளது. ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவிக்கு வந்தார். ஆனால் பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்டார். நான் ஒரு விநியோகஸ்தன். ஆரம்ப காலத்திலிருந்து எத்தனையோ படங்களை விநியோகித்திருக்கிறேன். ரஜினிகாந்தின் ராஜாதிராஜா கூட நான் விநியோகித்த படம்தான். ஒரு தயாரிப்பாளனாக எத்தனை வெற்றிப் படங்களைத் தந்தவன் என்பதை புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்த ஞானவேல் ராஜாவும், விஷாலும் என் படப் பிரச்சினைக்கு எத்தனையோ முறை போன் போட்டபோதும் ஒரு முறை கூட போனை எடுக்கவே இல்லை. விஷாலும், ஞானவேல் ராஜாவும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொறுப்புக்கு வந்தார்கள். ஆனால் சங்கத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொதுக்குழுவைக்கூட ஒழுங்காக நடத்தத் துப்பில்லாதவர்கள்.

விஷால் என்ன லாடு லபக்கு தாஸா? அவர் என்ன ஹிட்லரா? ஹிட்லருக்கு பட்லராக இருக்கக்கூட லாயக்கில்லாதவர். ஒரு தமிழனாக நான் வெட்கப்படுகிறேன். என்னை திட்டமிட்டு அவமதித்தார்கள் இந்த விஷாலும் ஞானவேல் ராஜாவும். நான் பார்க்காத அரசியல்வாதியா, தயாரிப்பாளர்களா… ஆனால் எனக்கே இந்தக் கதி என்றால், மற்ற உறுப்பினர்கள் நிலை என்ன?

எனவே விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஞானவேல் ராஜா கோஷ்டி வரக்கூடாது,” என்றார்.

இயக்குநர் சேரன், “தயாரிப்பாளர் சங்கத்தை சீரழித்தது போதாது என்று இப்போது விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன சாதித்தார் என்று இப்போது விநியோகஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார்? அருள்பதி நியாயமனவர், கண்ணியமானவர், நேர்மையானவர். அவர் விநியோகஸ்தர் சங்கத் தலைவராகத் தொடர்வதுதான் நல்லது.

சுரேஷ் காமாட்சி, “நடிகர் சங்கத்தைக் கைப்பற்றுவோம் என்றார்கள். இல்லாத பழியையெல்லாம் அண்ணன் ராதாரவி மீது சுமத்தி இவர்கள் சங்கத்தைக் கைப்பற்றினார்கள். என்ன சாதித்தார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்றினார்கள். அங்கு கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை கோடிக் கணக்கில் கையாடல் செய்துவிட்டு, பொதுக் குழுவில் பதில் சொல்லத் திராணியில்லாமல் தேசிய கீதம் பாடிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இதுதான் விஷால், ஞானவேல் ராஜா குரூப்பின் சாதனை. இது விநியோகஸ்தர் சங்கத்திலும் தொடர அனுமதிக்காதீர்கள். அருள்பதி அணியை வெற்றிபெறச் செய்யுங்கள்.” என்றார்.

மேலும் தயாரிப்பாளர் டி சிவா, தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் சௌந்தர், விநியோகஸ்தர் செல்வின்ராஜ் ஆகியோரும் அருள்பதி அணியை ஆதரித்துப் பேசினர்.