இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் தபு. தமிழில் “இருவர்”, “காதல் தேசம்”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற படங்களில் நடித்து தென்னகத்திலும் புகழ் பெற்றார். தற்போது இந்தியில் மட்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
1998-ம் வருடம் இவர், “ஹம் சாத் சாத் ஹைன்” என்ற இந்தி படத்தில் நடித்தபோதுதான் மான் வேட்டை வழக்கில், சல்மான்கான் சிக்கினார். 19 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக தபு, ஜோத்பூர் விமான நிலையத்துக்கு சென்றார்.
அப்போது ஒரு ரசிகர், தபுவிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். விமான நிலையத்தில் தபு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருடைய பாதுகாவலர்களையும் மீறி ஒரு ரசிகர் தபுவை நெருங்கி தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், அந்த நபரை பிடித்து தலைக்கு மேல் தூக்கி வீசி இருக்கிறார்கள்.
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் தபு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருடன் வந்த நடிகைகள் சோனாலி, நீலம் ஆகியோரும் இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி மூவரும் கூறும்போது, “நடிகைகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. நடிகைகளும் மனிதர்கள்தான் என்பதை சில ரசிகர்கள் மறந்து விடுகிறார்கள். அளவுக்கு அதிகமான கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எப்படி திருத்துவது? அந்த ரசிகருக்கும் குடும்பம் இருக்கும், சகோதரிகள் இருப்பார்கள். அவர்களிடம் அவர் இப்படித் தான் நடந்து கொள்வாரா?” என ஆவேசமாக கேட்டார்கள்.
இந்த சம்பவத்தால் ஜோத்பூர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.