full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுங்கள் – நடிகர் சங்கத்தில் வடிவேலு பரபரப்பு புகார்

நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்றதால், இந்தக் கூட்டணி படங்களிலும் தற்போது இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா யூடியூபில் நடத்திய பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.