தயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்

News

தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான படம் `தமிழ் படம்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இதன் இரண்டாவது பாகம் `தமிழ்படம் 2.0′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் விஜய், அஜித், தனுஷ், மற்றும் பிரபல அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை போன்று உருவாக்கி வெளியிட்டார்கள். இதுவும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து தயாரிப்பாளர் படம் முழுவதையும் பார்த்திருக்கிறார்.

படம் பார்த்துவிட்டு தலை குனிந்து உட்கார்ந்து, தலையில் கை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்ப்படம் 2.0 படம் பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை என்றும் பதிவு செய்திருக்கிறார்.

சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.