தரமணி – விமர்சனம்

Reviews

ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள், அஞ்சலி நடிப்புல, கற்றது தமிழ் ராம் இயக்கத்துல உருவாகியிருக்க படம் ‘தரமணி’.

கிரிக்கெட் மேட்ச்ல இந்தியா ஜெயிச்சா… பொண்டாட்டி நடத்தைய சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுற புருஷன் திருந்தி வாழ்வானா மாட்டானா… இது படத்தோட ஒன்லைன்.

அது எப்படி மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும முடிச்சுப் போட முடியும், இம்பாசிபுல்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது.

ஆனா ஐ ஆம் பாசிபுல்னு, சக்சஸ்புல்லா முடிச்சு (போட்டு) காமிச்சிருக்காரு டைரக்டர் ராம்.

காதலியால் ஏமாற்றப்பட்ட இளைஞன், கணவனால் ஏமாற்றப்பட்ட ஆங்கில இந்திய இளைஞி இருவருக்கும் இடையிலான காதல், கசமுசாக்கு அப்பறம் பொசஸிவ்னஸ், சந்தேகம், கசமுசா, பிரிவு, அழுகை, சோகம்…

மேல சொன்ன ரெண்டு கசாமுசாக்களுக்கும் வித்தியாசம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இவ்வாறான கசமுசாக்களுக்கு அப்பறம் அவங்க ஒண்ணா சேர்ந்தார்களா இல்லையா அப்டிங்கறது தான் படத்தோட முழுக்கதை.

காதல், பிரிவு, சோகம்… இது சினிமால சுடுற வழக்கமான ஊத்தப்பம் தான். ஆனா ராம், இந்த ஊத்தப்பம் மேல, வெங்காயம், காரட், நெய், இட்லி பொடி போடற மாதிரி, விவசாயிகள், மீனவர்கள், நீர் நிலை ஆக்ரமிப்புனு ஆரம்பிச்சு டிமானிட்டைசேஷன் வரைக்கும் இருக்கிற பிரச்சனைகள,

மழைச்சாரல் மாதிரி அங்கங்க தூவி விட்டு ருசியா, மணமா குடுத்திருக்காரு.

மழைச்சாரல்னதும் தான் ஞாபகத்துக்கு வருது. இந்த படத்துல மழை ஒரு முக்கிய கதாபாத்திரம். அது அடிக்கடி வருது, ஏன், எதுக்கு, எப்படி வருதுன்னுல்லாம் தெரியல. ஆனா அது வர்ற காட்சிகள் அத்தனையும் அவ்வளவு அழகு.

படம் மொத்தமும் ஆக்ரமிச்சு இருக்கறது வசந்த் ரவியும், ஆண்ட்ரியாவும் தான். அறிமுக நாயகன் வசந்த் ரவி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாரு. சில காட்சிகள்ல புரியாத புதிர் ரகுவரனை ஞாபகப்படுத்துறாரு.

ஆண்ட்ரியா தன்னோட அழுத்தம் திருத்தமான நடிப்பால ஆடியன்ஸ அசத்தியிருக்காங்க. அஞ்சலி, அழகம் பெருமாள் நடிப்புலயும் குறை சொல்ல ஒண்ணுமில்ல. பட், ரெண்டு பேரோட கதாபாத்திரமும் மனசில நிக்கல.

தேனி ஈஸ்வரோட சினிமொட்டோகிராபி சிம்பளி சூப்பர்ப். பின்னணிலயும், பாட்டுலயும் யுவனின் இசை இதமாயிருக்கு.

சினிமாவின் பார்வையில் ‘தரமணி’ – லேண்ட்மார்க்.