பெங்களூருவில் நடந்த கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன். தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது தமிழர்களுடைய உரிமை. தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.” என்று காரசாரமாக பேசினார்.
இந்நிலையில், விஷாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் நடத்தப்படும் பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கர்நாடகாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில இடங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. `தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். பிரச்சனைகள் சீரான உடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.