இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் கிட்டத்தட்ட 5௦ விருதுகளை அள்ளி வந்துள்ளது.இந்தப்படத்தில் வேலு என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருந்த படத்தின் நாயகன் தருண்குமார், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நம்பிக்கையான நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என நினைக்க வைத்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன் 11வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் இந்தப்படம் திரையிடப்பட்டதில், தருண்குமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
இந்தநிலையில் தேன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பீகாரில் நடைபெற்ற தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவில் மீண்டும் ஒரு முறை சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார் தருண் குமார். தேன் படத்திற்கு மட்டுமல்ல, நடிகர் தருண் குமாருக்கும் மகுடத்தில் சூடப்பட்ட இன்னொரு மயிலிறகாக இந்த விருது அமைந்துள்ளது..
இதுபற்றி நம்மிடம் தருண் குமார் பேசும்போது,
“ஒருவரின் கடினமான உழைப்புக்காக கிடைக்கும் விருது என்பது உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையில் எப்போதுமே பெற்றிராத சந்தோஷமான தருணங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும்.. இது தேன் படத்திற்காக நான் இரண்டாவது முறையாக பெறும் விருது.. முன்னதாக தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான முதல் விருதை பெற்றேன்.
தற்போது தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவிலும் எனது நடிப்பிற்கான அங்கீகாரம் கிடைத்து, அதற்காக இந்த சிறந்த நடிகர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து இன்னும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.தேன் படத்தில் நான் நடித்திருந்த வேலு கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் கடினமான மற்றும் சவாலான ஒன்றாகவே இருந்தது. என் உடலில் உள்ள காயங்களும் தழும்புகளும் அந்த கடின உழைப்பை இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய இதயத்தையும் ஆன்மாவையும் நூறு சதவீதம் நேர்மையாக உங்களது கதாபாத்திரத்திற்கு கொடுக்கும்போது அது எல்லைக்கோடுகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி மக்களின் இதயங்களை தொட்டுவிடும்.இதுபோன்ற விருதுகள் தான், நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் ஒரு நடிகராக தேர்ந்தெடுத்து நடிப்பதற்கான தூண்டுதலாக எங்களுக்கு நிச்சயம் இருக்கும். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எனது போராட்டத்திற்கும் கடின உழைப்புக்குமான ஒரு அங்கீகாரத்தையும் வெற்றியையும் இந்த படம் எனக்கு கொடுத்துள்ளது.
பர்சனலாக சொல்லவேண்டுமென்றால் என்னை பொருத்தவரை கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ஒரு திரையுலக பயணத்தை அமைத்துக்கொண்டு லட்சக்கணக்கானோருக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சாரைத்தான் எனக்கான தூண்டுதலாகவும் நான் கருதுகிறேன்.தர்பங்கா என்பது பீகாரின் கலைகளின் தலைநகரமாகும். அப்படிப்பட்ட தர்பங்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா என்பது இந்திய திரைப்பட விழாக்களில் மிக முக்கியமான ஒன்று. அந்த திரைப்பட விழாவில் எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருப்பதை ஒரு சாதனையாகத்தான் நான் கருதுகிறேன்.இந்த விருது வழங்கியதன் மூலம் எனது கடின உழைப்புக்கான அங்கீகாரத்தை வழங்கி கவுரவப்படுத்திய விழா அமைப்பாளர்களுக்கும் விழா நடுவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. என்னுடைய தயாரிப்பாளர் அம்பலவாணன் மற்றும் பிரேமா, இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் உடன் நடித்த சக நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் வரும் டிசம்பர் 29 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் தேன் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நிகழ்விலும் கலந்துகொள்ள இப்போதிருந்தே நான் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் தருண் குமார்..