full screen background image
Search
Friday 18 October 2024
  • :
  • :
Latest Update

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் விமர்சனம்!

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பற்றி ஏற்கனவே பலரும் நிறைய பேசிய நிலையில் படம்‌எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். கதைப்படி தீவிரவாத ஒழிப்பு படையில் உயர் அதிகாரியாக இருக்கும் விஜய் தனது நண்பர்கள் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்த ராஜீவ் மேனன் (மோகன்) என்பவரை கென்யாவில் வைத்து பிடிக்க நினைக்கிறார். அங்கு அவர் தப்பிவிடவே யுரேனியத்தை மட்டும் அவர்கள் வசம் இருந்து கைப்பற்றி வருகின்றனர். அதன்பிறகு தாய்லாந்தில் ஒரு தீவிரவாத ஆபரேஷனின் போது தனது சிறுவயது மகனை பறிகொடுக்கிறார். இதனால் மனம் உடையும் விஜய் வேலையை வேண்டாம் என விட்டுவிட்டு மனைவி சினேகாவை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஆண்டுகள் உருண்டோட வேறு ஒரு விஷயத்திற்காக ரஷ்யா செல்லும் விஜய் தன்னைப் போலவே இருக்கும் இளம் வயது விஜயை பார்த்து‌ ஆச்சரியப்படுகிறார்.‌ அந்த விஜய்யை தன்னுடன் அழைத்துவருகிறார் மூத்த விஜய். இளைய விஜய் வந்ததும் மூத்த விஜய்யின் வாழ்வில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்கிறது. அதற்கெல்லாம் யார் காரணம் என்பதை ஏஜெண்ட் விஜய் கண்டுபிடித்தாரா? இளம் விஜய் யார் என்பதே? கோட் படத்தின் கதை.

ஆளாளுக்கு கண்டதை பேசி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டனர். ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் ஓரளவுக்கு என்றே சொல்லலாம். இரண்டு விஜய் ஒருவர் ஏஐ மூலம் இளைய விஜயாக வருகிறார். சிறு சிறு தவறுகளையும்‌ தனது நடிப்பால் சரிசெய்துள்ளார். அப்பாவாக வரும் விஜய் அத்தனை துள்ளலுடன் இருக்கிறார். படத்தை முழுவதுமாக விஜய் மட்டுமே தாங்கி நிற்கிறார். ஏஐ ஆரம்பத்தில் சற்று வேறுபட்டு தெரிந்தாலும் போக போக பழகி விடுகிறது. முதல் பாதி சற்று மெதுவாக செல்கிறது. இடைவேளை காட்சி ரசிகர்களுக்கு விருந்து.

பிரசாந்த், பிரபுதேவா, சிநேகா, லைலா, அஜ்மல் என அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை நன்றாக செய்துள்ளனர்.‌ பிரேம்ஜி, யோகிபாபு நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.‌ பின்னர் வழக்கம் போல வெங்கட் பிரபு பசங்க கூட்டணியும் படத்தில் உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஏற்கனவே சுமார் தான். படத்துடன் பார்க்கும் போது பரவாயில்லை. ஆனால் பின்னணி இசை யுவனா இது என்று கேட்க வைக்கிறது. மங்காத்தா படத்துக்கு போட்ட பின்னணி இசையில் கொஞ்சமாவது போட்டு இருக்கலாம் ரசிகர்களுக்குதான் ஏமாற்றம்.

அங்கங்கே வரும் கூஸ்பம்ஸ் மூமண்ட் ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்கு பிறகு படம்‌சற்று சூடு பிடிக்கிறது.‌ இளைய தளபதி கதாபாத்திரம் கச்சிதம்.‌ நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் வில்லத்தனம் வெறித்தனம்.

சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு மாஸ் படத்துக்கு உண்டான பிரமாண்டத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக ஓபனிங் ட்ரெயின் சீன் மாஸ்.‌ கேப்டன் விஜயகாந்த் தொடர்பான ஏஐ சீன் ரசிகர்களுக்கு ட்ரீட். கிளைமாக்ஸ் காட்சி பிரமாண்டம்.‌ சாதாரண கதைதான்‌ அதனை மிக சுமாரான திரைக்கதை மூலம் ஒப்பேற்றியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

திரையரங்குகளில் ஒருமுறை சென்று ரசிகர்கள் கொண்டாடலாம். இன்னும் கொஞ்சம் வெட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் கோட் – ஓகே. ரேட்டிங் 3.5/5.