தண்டல் திரைவிமர்சனம்
இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ் , மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் திரைப்படம் தான் “தண்டேல்”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஷ்யாம் தத். இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். தயாரித்திருக்கிறது கீதா ஆர்ட்ஸ் நிறுவனம்.
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த நாக சைதன்யா, தனது கிராமத்தில் இருக்கும் இளைஞர்களோடு சேர்ந்து சுமார் 2000 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் குஜராத் கடற்கரைக்குச் சென்று, அங்கிருந்து படகு எடுத்து மீன்பிடிக்கச் செல்கின்றனர். மீன் பிடிக்கச் செல்லும் குழுவிற்கு நாக சைதன்யாதான் தலைவர் அதாவது அதற்கு இன்னொரு பெயர் இருக்கிறது அது தான் தண்டேல்.
வருடத்தில் ஒன்பது மாதங்கள் மீன்பிடிப்பது இவர்களது வழக்கம். மூன்று மாதம் மட்டுமே தனது குடும்பத்தோடு இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
நாக சைதன்யாவும் சாய்பல்லவியும் சிறுவயதில் இருந்தே காதலித்து வருகிறார்கள். நாக சைதன்யா மீது சாய் பல்லவியும், சாய் பல்லவி மீது நாக சைதன்யாவும் உயிரையே வைத்திருக்கிறார்கள். இப்படி ஒன்பது மாதங்கள் காணாமல் இருப்பதை சாய்பல்லவி விரும்பவில்லை.
மேலும், மீன்பிடிப்பதென்பது ஆபத்தான தொழில் என்று, அதனை கைவிடும்படி நாக சைதன்யாவை கெஞ்சுகிறார் சாய் பல்லவி. ஆனால், இதுதானே வாழ்வாதாரம் என்று கூறி மீன்வேட்டைக்கு சென்று விடுகிறார் நாக சைதன்யா.
தொடர்ந்து சில நாட்களில், கடும் புயலில் படகில் சென்றவர்கள் சிக்கிக் கொள்ள, அருகில் இருக்கும் பாகிஸ்தான் எல்லைக்குள் படகு சென்றுவிடுகிறது. இதனால், பாகிஸ்தான் படை வீரர்களால் நாக சைதன்யா உட்பட 21 பேரை கைது செய்யப்படுகிறார்கள்.
அங்குள்ள சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள்.
இறுதியில் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து வெளியே வந்தார்களா.?? நாக சைதன்யாவின் காதல் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஹீரோவான நாக சைதன்யா, கதையின் நாயகனாக நடித்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இதற்கு முன் வெளியான படங்களை விட இப்படத்தில் சற்று மெனக்கெடல் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் நாக சைதன்யா. ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட், நடனம், எமோஷன்ஸ் என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் நாக சைதன்யா.
சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் ஆரம்பத்தில் வரும் சண்டைக் காட்சி மற்றும் ஜெயில் சண்டைக் காட்சி இரண்டுமே நாக சைதன்யாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்து தான்.
வழக்கத்தை விட சற்று ஓவர் டோஸ் நடிப்பைக் கொடுத்து விட்டார் நடிகை சாய்பல்லவி. நாக சைதன்யாவிற்கும் சாய்பல்லவிக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆங்காங்கே தனது யூனிக் நடிப்பை கொடுக்காமல் இல்லை சாய்பல்லவி.
மேலும், ஆடுகளம் நரேன், பப்லு, கருணாகரன் உள்ளிட்ட மற்ற கேரக்டர்கள் அனைவரும் தத்தங்களது கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள்.
ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதாலோ என்னவோ படத்தின் கதை நம்மை கதைக்குள் இழுத்துச் சென்று விட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, அங்கு இருக்கும் சிறைக்குள் அடைபட்டு இருக்கும் இந்திய மீனவர்கள் என்ன மாதிரியான இன்னல்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை வெளிச்சமாக காட்டி நம் கண்களில் ஈரத்தைக் கொண்டு வர வைத்துவிட்டார் இயக்குனர்.
ஆங்காங்கே சற்று கதை வேறு ஒரு திசையை நோக்கி நகர்ந்தாலும், கதை சென்று முடிவடையும் இடம் என்னவோ பாசிடிவான ஒரு முடிவு என்பதால் கதை நம்மை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு மிகப்பெரும் வெற்றிகரமாக இருந்திருக்கிறார். இவரின் பின்னணி இசையே படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு தூணாக இருந்தது. சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவின் பங்கானது அலப்பறியது.
தண்டேல் – நாயகியின் காதல் யுத்தம்..