இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் விழித்திரு படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் மீரா கதிரவனின் இரண்டாவது படமான “விழித்திரு” திரைப்படம் பல இன்னல்களைக் கடந்து வெளியாகியுள்ளது.
வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் கற்காமல் இலக்கியம், அரசியல் புரிதலுடன் படைப்புகளை உருவாக்கும் பயிற்சி பெற்றவர் இவர்.
சிறந்த படைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பல்வேறு அவமானங்களை சகித்துக் கொண்டு கள்வர்களின் காலமாக மாறிவிட்ட இந்த நாட்டில் நல்ல படைப்புகளை உருவாக்க போராட வேண்டியிருக்கிறது.
அவ்வாறு தான் மீரா கதிரவனும் தயாரிப்பாளராக வேண்டியிருக்கிறது. படம் சரியில்லை என எத்தனை பேர் சொன்னாலும் எவ்வாறு அது சரியில்லை என பார்ப்பதற்காகவே, மக்கள் விழுந்தடித்துக் கொண்டு போய் மசாலா நடிகர்களின் படத்தைப் பார்த்து நூறு கோடி இருநூறு கோடி என அள்ளிக் கொடுக்கிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட நடிகரல்லாத படம் ஒன்று எவ்வளவு தான் சிறப்பாக இருப்பதாக எத்தனைப்பேர் சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்வதில்லை.
இதனாலேயே இந்த சமூகத்திற்கு பங்களிக்க வேண்டிய பல சிறந்த கலைஞர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். இந்நிலை தான் திரைப்படத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தொடர்கிறது.
இனியும் இப்படிப்பட்ட தவறுகளுக்கு தமிழ் சமூகம் இடம் தரக்கூடாது. நான் எனது குடும்பத்தினருடன் இப்படத்தை பார்த்தேன். தமிழ் சினிமாவிற்கு புதிய பாணியில் அமைந்துள்ள இந்த படம் அனைவரையும் கவரும் படியான சலிப்பு தட்டாத படமாக உள்ளது. நாம் ஆதரவளிக்க வேண்டிய நல்ல படைப்பாளனான மீரா கதிரவனின் “விழித்திரு” திரைப்படம் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.