மனிதன் கற்களால் ஆயுதங்களைச் செய்து வேட்டையாடத் தொடங்கிய காலத்தினூடே இன்னொன்றையும் செய்யத் தொடங்கியிருந்தான், அதுதான் சித்திரம் தீட்டுதல். குகைகளையே இருப்பிடமாகக் கொண்டிருந்தவன், பாறைகளில் கிறுக்க ஆரம்பித்த கோடுகள் தான் உலகின் முதல் மொழியாக இருக்க முடியும்.
இசையை எவ்வாறு மதம், மொழி இவற்றைக் கொண்டு பிரிக்க முடியாதோ, அதே போல ஓவியங்களையும் ஒரு எல்லைக்குள் வைத்து அடைத்துவிட முடியாது. அது கண்டங்கள் தாண்டிப் போனாலும், யுகங்கள் நூறு ஆனாலும் காண்போரின் மனதோடு பேசும், உறவாடும்.
அப்படித்தான் உலகின் அதிசயக் கலைஞன் லியானார்டோ டா வின்சியின் ஓவியங்கள் இன்றளவிலும் விழித்திரையினில் இறங்கி, மன உணர்வுகளோடு பேசிக் கொண்டிருக்கின்றன. டா வின்சியின் எண்ணத்தில் உதித்த வண்ணத் தாரகை “மோனாலிசா” நூற்றாண்டுகளைக் கடந்தும் நிலைத்திருக்கிறாள்.
அதே போல, இந்தியத் துணைக்கண்டத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உலக அரங்கில் தலைநிமிரச் செய்த கலைஞன் ரவி வர்மா. இவரின் தூரிகை வழியே பிறந்த பெண்களெல்லாம் இந்தப் பிரபஞ்சம் இதுவரைக் காணாத பேரழகிகள்.
இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திரமாக்கினால் அது எப்படி இருக்கும்?. இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தனைக்கு, தனது தூரிகைகளால் உயிர் தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
இந்தோ-இத்தாலிய உறவின் 70-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக A.P.ஸ்ரீதரின் ஓவியங்கள் “The Cadent Coalition” என்னும் தலைப்பில் புது டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இத்தாலிய தூதரகமும், இந்திய கலாச்சார மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இக்கண்காட்சியின் தொடக்க விழா 02/05/2018 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் திரு.ரீவா கங்குலி தாஸ் (Director General, ICCR) மற்றும் திரு.லோரான்சோ ஏஞ்சலோனி (Ambassador Of Italy To India) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும், இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு ஓவியர் A.P.ஸ்ரீதரை வாழ்த்தினர்.
03/05/2018 முதல் 31/05/2018 வரையிலும் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் ஒவ்வொரு நாட்களிலும் பல முக்கியமான கலையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.