விருது பட்டியலிலேயே இடம் பெறாத முன்னனி நடிகர்களின் படங்கள்

News

தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த படம் மற்றும் நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது.

6 ஆண்டுக்கான மானியம் பெறும் மற்றும் விருது பெறும் படங்களை ஒட்டு மொத்தமாக நேற்று தமிழக அரசு வெளியிட்டது. வழக்கமாக ஒன்றிரண்டு ஆண்டுக்கான விருது மட்டும் நிலுவையில் இருக்கும். ஆனால் 6 ஆண்டுகளுக்கும் சேர்ந்து மொத்தமாக அறிவித்துள்ளது.

இதில் சிறந்தவையாக அறிவிக்கப்பட்ட படங்கள் அந்த கால கட்டத்தில் சிறப்பாக ஓடினாலும் தற்போது அந்த படங்களை ரசிகர்கள் நினைவில் கொள்வது கடினமே. உதாரணத்திற்கு ‘பசங்க’ படம் 2009-ல் வெளியானது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மைனா, வாகை சூடவா, வழக்கு எண் 18/9, ராமானுஜன், குற்றம் கடிதல், ஆகிய படங்களுக்கும் காலம் கடந்து விருது கிடைத்துள்ளது.

2009-ல் சிறந்த நடிகராக கரண், 2010-ல் விக்ரம், 2011-ல் விமல், 2012-ல் ஜீவா, 2013-ல் ஆர்யா, 2014-ல் சித்தார்த் ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிறந்த முறையில் நடித்து விருது பெற்றாலும் இந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஒருவர் கூட இடம் பெறாதது அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வழக்கமாக இவர்களில் யாராவது ஒரு முன்னணி நடிகருக்கு விருதுகள் கிடைக்கும். ஆனால் 6 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட விருது இல்லை. அதே போல் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகை, குணச்சித்திர நடிகை உள்ளிட்ட மற்ற விருதுக்கு கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய நடிகர்கள் நடிப்பில் வெளியான பல படங்கள் நடிப்புக்காகவும், கதை அம்சங்களுக்காகவும் பேசப்பட்டன. ஆனால் அந்த படங்களுக்கோ அவர்களுக்கோ விருதுகள் இல்லை.

இதில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசன் தொடர்ந்து அரசை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். ரஜினிகாந்த் அனைவரிடமும் நல்ல நட்பு கொண்டு இருந்தாலும் சமீபத்தில் சிஸ்டம் சரியில்லை என்று பேசியதால் கண்டனத்துக்கு ஆளானார்.

இதுபோல் நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக ஆக்ரோ‌ஷமாக வீடியோ வெளியிட்டார். தனது மெர்சல் பட தலைப்பையும் ஜல்லிக்கட்டு வடிவில் வெளியிட்டார். நடிகர் சூர்யா, மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பது நாம்தானே மக்களே என்று கிண்டல் அடித்தார். எனவே தான் இவர்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது 2009 முதல் 2014 வரை 6 ஆண்டுகள் வெளியான படங்களின் அடிப்படையில் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவடைந்துள்ள 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் வந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

2017-ம் ஆண்டு திரைக்கு வரும் படங்கள் டிசம்பர் வரை கணக்கிடப்படும். எனவே, ஜனவரியில் இந்த 3 ஆண்டுகளில் வெளியான படங்களில் இடம் பெற்ற சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விருது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.