மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி!!

News

“வேலையில்லா பட்டதாரி -2” படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்களாக நடிகர் தனுஷ் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இருந்தாலும் “வடசென்னை”, “மாரி-2” என இரண்டு பெரிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மற்றுமொரு படம் தான் “தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்”. தனுஷின் முதல் ஹாலிவுட் படமான இப்படம் தமிழில் “வாழ்க்கைய தேடி நானும் போனேன்” என்று டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் “ஃபகிர்” திரைப்படம் திரையிடப்படுவதை ஒட்டி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருக்கும் தனுஷ், தற்போது அங்கு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அந்தப் பணிகள் முடிந்த பிறகு இந்தியா திரும்பும் தனுஷ், “மாரி-2” படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இவற்றிற்கு நடுவே தனுஷ் இயக்கும் அடுத்த படம் வருகிற ஆகஸ்டில் துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் பாலிவுட்டில் தனுஷை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிப்பதை தனுஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மேலும், “வேலையில்லா பட்டதாரி” படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியிலும் தனுஷ் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் விசேசம் என்னவென்றால் சமீபமாக எந்தப் படத்திலும் தனுஷுடன் இணைந்து பணியாற்றாத இசையமைப்பாளர் அனிருத், இப்படத்தில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில், “விரைவில் தனுஷுடன் இணைவேன்” என்று அனிருத் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.