2018 ல் வெளியான 260 ற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும்,  பாராட்டையும் தட்டி சென்ற டாப் 10 படங்கள்…!!

News

ராட்சசன்

2014ம் ஆண்டு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டு வாங்கிய முண்டாசுப்பட்டி திரைப்படம் அன்று பலருக்கு திருப்புமுனையாக இருந்தது. குறிப்பாக விஷ்ணு விஷால், ராமதாஸ், காளிவெங்கட், “இசை அமைப்பாளர்” ஷான் ரோல்டன், “ஒளிப்பதிவாளர்” பி.வி. ஷங்கர் என அனைவரும் அன்றிலிருந்து இன்று வரை பல படங்களில் பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்… பல வெற்றி படங்களில் நடித்த ஆனந்தராஜிற்கு கூட முன்டாசுப்பட்டி தான் காம்பேக் கொடுத்த படமே. ஆனால் “கேப்டன் ஆப் ஷிப்” எனும் டைரக்டர் ராம் குமார் மட்டும் நான்கு ஆண்டுகள் எந்த படத்திலும் கமிட் ஆகாமலே இருந்தார். ஆனால் ராட்சசன் பற்றிய அறிவிப்பு வந்ததும் முண்டாசுப்பட்டி போல் ஒரு ஜாலியான படத்திற்கு ரசிகர்கள் எதிர் பார்த்துகொண்டிருக்க, ராட்சசனின் த்ரில்லர் ட்ரைலர் அனைவருக்கும் படத்தின் மீதான எதிப்பார்ப்பை அதிகரித்தது. அதே மேஜிக் தான் படத்திலும் நடந்தது. படம் ஆரம்பத்ததிலிருந்தே ஆடியன்சின் எதிர்பார்ப்பையும், அவர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்டும் என படம் பரபரப்பாக நகர்ந்ததும், திரையில் இருந்த பதட்டத்தை அப்படியே தரையில் இருக்கும் ஆடியன்சுக்கு கடத்திய விதத்திலும் படம் ஒரு பக்காவான சீட் எட்ஜ் திரில்லராக மாறியது. அதற்கு ராம்குமாரின் திரைக்கதை, ஜிப்ரானின் மிரட்டல் இசை, பி.வி. ஷங்கரின் கண்ணாம்பூச்சி ஒளிப்பதிவு, சான் லோகேஷின் பரபர எடிட்டிங் என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்ததே காரணம். படத்தில் வரும் சில மேஜிக் காட்சிகளை விட, மொத்த படத்தையே ஒரு மேஜிக்காக ரசிகர்களுக்கு கொடுத்தது தான் ராம் குமாரின் வெற்றிக்கான சூட்ச்சமம். படம் வெளி வந்த நாள் முதலே ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுவும் படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற் போல் “ராட்சச வெற்றி”. இன்னும் பல மொழிகளில் படம் ரீமேக் ஆகா இருப்பது, தமிழ் சினிமாவிற்கு ராட்சசன் வாங்கி கொடுத்த கோல்ட் மெடல்.

உலகத்தில் சிறந்த ரிவன்ஞ் ஒருவரின் “வெற்றி” என்பார்கள். தன்னுடைய கதையை தேராது, ரிஸ்க் என ஒதுக்கிய பல தயாரிப்பாளர்கள், ஹீரோக்களை தன வெற்றி மூலம் இயக்குனர் ராம் குமார் ரிவென்ஞ் எடுத்துள்ளார் என்றே சொல்லலாம். 2 மணிநேரம் 49 நிமிடமும் அடுத்து என்ன என ரசிகர்களை எதிர்பார்க்கவைத்த ராம் குமாரின்அடுத்த படத்தை இப்பவே ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வரும் ஆண்டில் இவர் மூலம் இன்னொரு வெற்றி படம் வரும் என நாமும் எதிர்பார்க்கலாம். சபாஷ் ராம்குமார்… சபாஷ்….!!!

96′

விஜய் சேதுபதி இந்த வருடம் ஹீரோவாக நடித்த ஐந்து படங்களில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது 96 படம் தான். குறிப்பாக தமிழ் நாட்டை விட கேரளாவில் இவருக்கு அதிக ரசிகர்களை இந்த படம் பெற்று தந்தது. பிரேமம் வெளிவந்த போது தமிழ் நாட்டில் அந்த படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்களோ, அதே போல் அங்கு கேரள ரசிகர்கள் 96’ஐ கொண்டாடியது இந்த படத்திற்கு கிடைத்த மகுடம். விஜய் சேதுபதியின் ஆரம்பகாலத்தில் அவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் பிரேம் எனும் கதாபாத்திரத்தில் அவர் பேசிய “என்னாச்சு” எனும் வசனம் தான். அந்த உண்மைக்கதையில் , “என்னாச்சு” எனும் வார்த்தைக்கு உரிமையாளரான நிஜ பிரேம் தான் இந்த 96′ படத்தின் இயக்குனர் பிரேம். ஒரு ஒளிப்பதிவாளர் எழுதினால் கதையும், காட்சியும் எவ்வளவு ரம்மியமாக இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம். படம் மொத்தத்தையும் ராம், ஜானு எனும் இரண்டே கதாபாத்திரத்தை கொண்டு வடிவமைத்தது, அதற்கு விஜய் சேதுபதி, த்ரிஷா என சரியான நடிகர்களை தேர்வு செய்தது, கதையின் களத்தில் இரவு, இளையராஜாவின் 80’s பாடல்கள், பள்ளி , அத்தனைக்கும் மேலாக இயற்கையை தேர்வு செய்தது இயக்குனர் பிரேம் குமாரின் சாமர்த்தியம் எனலாம். படத்தின் டைட்டிலில் இயற்க்கை, இளையராஜா, ஜானகி அவர்களுக்கு நன்றி என போட்டதற்கு மிக நெருக்கமான உண்மையாக இருந்தது படம்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்” முதல் காதல்” என்றொரு பக்கம் இருக்கும். அப்படி பலர் தங்கள் டைரியில் இருந்து கிழித்து பொக்கிஷமாக வைத்திருக்கும் அந்த பக்கத்தை திரும்பி எடுத்து பார்க்க வைத்தது96 ன் மிகப்பெரிய வெற்றி. படம் பார்த்த பலர் ரியல் டைம் ராம் – ஜானுவோடு அல்லது ப்ளாஷ் பேக் ராம் – ஜானுவோடு தங்களை இணைத்து கொண்டதால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். “காதலே… காதலே… தனிப்பெரும் துணையே…” பாடல் பலரின் செல்போனில் பிளே லிஸ்ட், ரிங் டோன், ஹலோ டியூன் என அனைத்தையும் ஆக்கிரமித்து உள்ளது. 96′ வெளிவந்த ஒரே மாதத்திற்குள் தொலைக்காட்சியில் படம் ஒளிபரப்பாகியும் இன்று வரை திரையரங்கில் ஓடிக்கொண்டிருப்பது இன்றும் அதற்கான ரசிகர்கள் இருப்பதையே காட்டுகிறது. “96′ ஒரு மாடர்ன் ஆட்டோகிராப்” என்பதை விட இது ஒரு “Vintage classical Love Story” என்பது பொருத்தமாக இருக்கும். வரும் காலங்களில் வன்முறை, சயின்ஸ் பிக்சன் , திரில்லர் என பல படங்கள் வரும் போதெல்லாம் பிரேம் குமாரின் மூலம் இதே போல் இயற்க்கைக்கு நெருக்கமான, இதமான படங்கள் வரும் என ரசிகர்கள் இப்பவே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். லவ் யூ … பிரேம் குமார் சார்……

நடிகையர் திலகம்

கடந்த சில ஆண்டை விட கதாநாயகியை மையமாக வைத்து இந்தாண்டு வந்த படங்களின் சதவிகிதம் அதிகம் எனலாம். அப்படி இந்த ஆண்டு வந்த படங்களில் அனைவரின் பாராட்டில் நூற்றுக்கு நூறு வாங்கிய படம் நடிகையர் திலகம். மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசும் இந்த படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். சமூக வலைத்தளங்களில் தனக்கு இருந்த ட்ரோலர்ஸ் அனைவரையும் தன் ரசிகர்களாக மாற்றிய மேஜிக் இந்த படத்தில் நடந்தது. நடிப்பில் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் பட்டாளமே இருந்தும் அத்தனை பேரையும் புறம் தள்ளி தனி ஆளாக படத்தை தாங்கினார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரி மட்டும் ஆணாக பிறந்திருந்தால் சிவாஜி கணேசன் எனும் நடிகனே வந்திருக்க முடியாது என அப்போது சொல்வார்களாம். அப்படிப்பட்ட நடிகையை இன்றைய இளைஞர்கள் பலருக்கு நினைவு கூர்ந்த விதத்தில் இந்த படம் இந்த வருட பொக்கிஷம் எனலாம்.

ஜெமினி கணேசனை தப்பாக சித்தரித்தது, சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற ஆளுமைகளின் பாகம் இல்லாமலே திரைக்கதை அமைத்தது, என பல சர்ச்சைகள் இருந்தாலும் அது படத்தை எதுவும் தொந்தரவு செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் படம் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் எடுத்திருந்தாலும் தெலுங்கு ரசிகர்களை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்டது என்பது தான். இயக்குனர் நாக அஷ்வினுக்கு இது தான் முதல் படம் என்றாலும் தரமான படமாக அமைந்தது. துல்க்கர் சல்மானின் நடிப்பு சில இடங்களில் ஜெமினியை நினைவுகூர்ந்தது. அழகான ஒளிப்பதிவு, அளவான இசை, பீரியட் படத்துக்கு பக்க பலமான ஆர்ட் ஒர்க் சரியாக இணைந்ததால் நடிகையர் திலகம் ஒரு “கிளாசிக் படமாக” மாறியது. வசூலில்லும் அனைத்து ஏரியாவிலும் லாபம் ஈட்டிய படம். இந்தாண்டுக்கான பல விருதுகளில் கீர்த்தி சுரேஷின் பெயர் இப்பவே பொறிக்கப்பட்டது என்று கூட சொல்லலாம். கீப் கோயிங்……. கீர்த்தி சுரேஷ்………

பரியேரும் பெருமாள்

அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்தாண்டு பலரின் பாராட்டை வாங்கிய திரைப்படம் பரியேரும் பெருமாள். படத்தில் பரியனுக்கும் கருப்பிக்கும் இடையே இருக்கும் உறவை காட்சியாக வரையருக்காமால் முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை ரசிகர்களை உணர வைத்ததற்கே முதல் பாராட்டுகள். தலீத் எனும் ஒரே காரணத்துக்காக ஒருவனுக்கு இன்றும் பல இடங்களில் நடக்கும் கொடுமைகளை இந்த படம் பேசியது. படம் ஜாதி அரசியலை பேசினாலும் அனைத்து ஜாதி மக்களாலும் கொண்டாடப்பட்டது. சினிமா பொழுதுபோக்கு என்பதை தாண்டி சமூகத்துக்கு எவ்வளவு பெரிய தாக்கத்தை தரும் என ஒவ்வொரு படமும் ஒரு படம் நிரூபிக்கும். அப்படி இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் மணிமகுடம் தான் இந்த பரியேரும் பெருமாள்.

பரியன், ஜோ, ஜோவின் அப்பா, நண்பன் ஆனந்த், பரியனின் அப்பா என காட்சிக்கு காட்சி பல கதாபாத்திரகள் அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்தது படத்தை வெற்றி படமாக மாற்றியது. சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு பக்கபலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கௌரவ கொலை, தீண்டாமை, தற்கொலைக்கு பின் ஒளிந்திருக்கும் கொலை, சட்டக்கல்லூரியில் நடக்கும் அரசியல், என பல விஷயங்களை ஒரே படத்தில் சரியாகவும், நேர்த்தியாகவும் பேசியதே இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர காரணமாக இருந்தது. இதுவரை பல விருதுகளை வாங்கி குவித்த இந்த படம் இன்னும் பல விருதுகளை வாங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பா.ரஞ்சித் இயக்குனராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறி இருப்பதால் இனி வரும் காலங்களிலும் இது போன்ற பல தரமான படங்களைஅவர் மூலம் எதிர் பார்க்கலாம். தி பெஸ்ட் ஆப் 2018….

வடசென்னை

தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் எந்த படம் வந்தாலும் அது வெற்றி படம் தான் என்பதை மீண்டும் நிரூபித்த படம் வட சென்னை. இந்த வருடம் கேங்க்ஸ்டரிசம், வன்முறை காட்சிகள் அதிகம் நிறைந்த படம் இதுதான் எனலாம். வட சென்னை மக்கள் வாழும் பகுதியை களமாக கொண்ட இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் வட சென்னை வாசிகளாகவே மாறியிருந்தது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். இதுவரை வந்த வெற்றிமாறன் படங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான படமென வட சென்னையை சொல்லலாம். அதிலும் உச்சகட்ட எதிர்ப்பு, அவர் எந்த மக்களை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்தாரோ அந்த பகுதி மக்களின் சிலரே படத்தில் தங்களை தவறாக சித்தரித்துள்ளார் என எதிர்த்தது தான். ஆனால் இந்த படத்தை வெறும் படமாக மட்டுமே பார்த்தால் ஒரு நல்ல Sequal க்கான நல்ல தொடக்கமாகவே தெரியும்.

விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கான ஆடியன்ஸை சத்தமில்லாமல் சம்பாரித்தது வடசென்னை. அதற்கு காரணம் வெற்றிமாறன் ரசிகர்கள் அவரிடம் எதிர் பார்க்கும் யதார்த்தமான உரையாடல், அழுத்தமான காட்சிகள், சாதாரண சீனில் கூட இருக்கும் டீடைலிங் என அனைத்தும் இதிலும் இருந்தது தான். இந்த படத்திற்கு விமர்சகர்களால் சின்ன சின்ன விஷயங்களை கூட பூதாகரமாக விமர்சிக்கபட்டது வெற்றி மாறன் எனும் இயக்குனரின் வளர்ச்சியை காட்டியது. அதை அவர் எதிர் கொண்டவிதம் அவரின் முதிர்ச்சியையும் காட்டியது. இந்த இரண்டும் சேர்ந்து வட சென்னை 2 , விமர்சகர்களையும் தன் ரசிகர்களாக மாற்றும் என நம்பலாம். வெற்றி……..மாறன்

மேற்குதொடர்ச்சி மலை

அறிமுக இயக்குனர் லெனின்பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வந்த படம் மேற்குதொடர்ச்சி மலை. இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத வாழ்வியலை எதார்த்தம் குறையாமலும், மேற்குதொடர்ச்சி மலையில் வாழும் மக்களின் வலிகளையும், வழிகளையும் திரையில் கொண்டுவந்த படம். அங்கு வாழும் ரங்கசாமி என்பவனின் வாழ்க்கையையும், அந்த மக்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலையும் தத்ரூபமாக காட்சிபடுத்தி இருந்தார் இயக்குனர். ஒரு படத்தின் வெற்றி என்பது, நாம் திரையரங்கை விட்டு வெளியே வந்தும் எவ்வளவு நேரம் நமக்குள் அந்த படம் இருக்கிறது என்பதில் தான் உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் மற்ற படங்களை விட அதிக தாக்கத்தை கொடுத்தது இந்த படம். லெனின் பாரதி அவர்களின் உழைப்பு, இதற்காக அவர் செலவழித்த நாட்கள் வரையறுக்க முடியாதது. இளையராஜா அவர்களின் இசை படத்தை எந்த இடத்திலும் தனித்து தெரியாமல், படத்தோடு படமாக ஒன்றி இருந்தது அருமை. மேஸ்ட்ரோ…… குறிப்பாக தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இந்த படத்தை உலக தரத்துக்கு கொண்டுசென்றது.

மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு ஒரு செய்தியை கடத்துவதில் இருக்கும் வலிகளில் தொடங்கி, வாழவே போராடும் மக்களின் வாழ்வியலை படமாக கொடுத்ததிற்கு லெனின் பாரதி அவர்களுக்கு ஒரு” ராயல் சல்யூட்”. இதுவரை வந்த படங்களில் ஒரு கதாபாத்திரம் இறக்கும் போது கூட கொடுக்காத தாக்கத்தை ஒரு ஏலக்காய் மூட்டை மலையில் இருந்து விழும் போது கொடுத்த போது தான் மேற்கு தொடர்ச்சிமலை நமக்கு முழுதாக படர்ந்து இருந்ததை உணர முடிந்தது. படம் வெளிவருவதற்கு முன்னரே பல விருதுகளை வாங்கியிருந்தாலும் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்ப்பே மிகப்பெரிய விருது. நம் நாட்டில் உலக சினிமாவை கொண்டாடும் நேரத்தில் , பல நாடுகளில் மேற்கு தொடர்ச்சிமலையை கொண்டாடி கொண்டு இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழில் ஒரு உலக சினிமா……. மேற்கு தொடர்ச்சிமலை…….

சவரக்கத்தி

இந்த வருடம் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கினின் எழுத்து, நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த படம் “சவரக்கத்தி”. ஒரு கொலைகாரனுக்கும், பார்பருக்கும் இடையில் நடக்கும் கேட் & மௌஸ் கேம் தான் படம். அதைவிட முடிஎடுக்கும் கத்திக்கும், உயிர் எடுக்கும் கத்திக்கும் இடையில் நடக்கும் போர் என்றால் பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு கதையை வன்முறையாகவும், காமர்சியலாகவும் சொல்லியிருக்கலாம். ஆனால் ப்ளாக் காமெடியில் சொன்னது தான் இந்த படத்தின் ஹை லைட் . கொலைகாரனாக வரும் மிஷ்கின், இதுவரை எந்த நடிகர்களின் சாயலும் இல்லாமல் தனக்கான யுனிக் ஸ்டைலில் நடித்து படத்தை சர்வ சாதாரணமாக நகர்த்தியிருப்பார். மேலும் அவருடன் வரும் உதவியாளர்களின் நடிப்பும் கச்சிதம். எப்போதும் பதட்டமாகவே வரும் ராமின் நடிப்பு, இதுவரை நாம் பார்க்காத ராமை பார்க்க வைத்தது. பூர்ணாவின் கதாபாத்திரமும், அவர் நடிப்பும் இந்த வருடத்தில் சிறந்த நடிகைக்கான லிஸ்டில் அவர் பேரை இடம் பெறச்செய்யும்.

ஒரு நாளின் காலையில் இருந்து மாலைக்குள் நடக்கும் கதை தான் படம் என்பதால் , படம் பார்ப்பவர்களை எந்த பக்கமும் திசைதிருப்பாமல் சென்றது சவரகத்தியின் பிளஸ். பெரும்பாலும் மிஷ்கின் படங்கள் ஆடியன்சின் மௌத் டாக்கில் தான் ஹிட்டடிக்கும். பெரிய நடிகர்கள், பாடல்கள் என சில விஷயங்கள் இல்லாததால் படத்திற்கு ஒப்பனிங் இல்லையென்றாலும், படம் பார்த்த பலரை திருப்திபடுத்தியது இந்த சவரக்கத்தி. அரோல் கொரேலியின் இசை படத்தை அதற்கான மூடிலேயே நகர்த்த பெரும் பலமாக இருந்தது. இறுதிகாட்சியில் வரும் சவரக்கத்தி பாடல் மொத்த படத்தையும் ஆடியன்ஸ் தியேட்டர் விட்டு போகும் வரை தாங்கி பிடித்தது. வெல் கட்…… சவரக்கத்தி

யூ டர்ன்

2016இல் கன்னடத்தில் வெளிவந்த யூ டர்ன் படத்தை அப்படியே மீண்டும் தமிழுக்கு அதே இயக்குனர் பவன் குமார் ரீமேக் செய்த படம் தான் இந்த யூ டர்ன். சமந்தா நாயகியாக நடித்த இந்த படம் இந்தாண்டின் ஒரு சிறந்த திரில்லர் எனும் அளவுக்கு பெயர் வாங்கியது. ஒரு க்ரைம் மிஸ்ட்ரி படத்துக்கான அனைத்து டெம்ப்ளேட்டும் இந்த படத்தில் சரியாக இருந்தது. பெரும்பாலான படங்கள் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க தான் சீட் எட்ஜ் திரில்லராக மாறும். ஆனால் இந்த படம் தொடங்கியதிலிருந்தே பரபரப்பான யூகிக்க முடியாத, ட்விஸ்டோடு நகர்ந்ததால் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்ததை விட அதிகமாகவே பூர்த்தி செய்தது . கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மாற்றுவதர்க்கென எந்த ஒரு மாற்றமும் செய்யாமல், அப்படியே கொடுத்தாதால் இயக்குனருக்கு தேங்க்ஸ்…..

இசை, எடிட்டிங், கேமரா என அனைத்து டிப்பார்ட்மென்ட்டும் கன்னட யூ டர்ன் -இல் இருந்தவர்கள் தான் என்பதால் அந்த படம் கொடுத்த அதே தாக்கத்தை தமிழிலும் கொடுத்தது. இந்த வருடம் வந்த ஹீரோயின் பேஸ் படங்களில் இந்த படமும் முக்கியமானது. கன்னட யூ டர்ன் பார்த்த சிலருக்கு தமிழ் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றலாம். அதற்கு காரணம் கன்னடத்தில் நமக்கு பரிச்சயமில்லாத ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருந்ததும், தமிழில் நாம் பார்த்து பார்த்து பழகிய சமந்தா நடித்திருந்ததும் தான் என்பது எங்கள் கணிப்பு….. யூ… டர்ன்….

கனா

இந்த வருடத்தின் இறுதியில் வந்து ஹிட் அடித்திருக்கும் படம் கனா. தமிழ் சினிமாவில் வந்த ஒரு சில ஸ்போர்ட்ஸ் படங்களில் பெஸ்ட் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்கும் பெண் எப்படி இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடும் அளவிற்கு செல்கிறாள் என்பது ஒன் லைன் என்றாலும், அதில் ஒரு விளையாட்டின் கனாவையும், ஒரு விவசாயின் கனாவையும் கலந்து சொன்னது இந்த படத்தின் வெற்றி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இருவரும் தங்கள் நடிப்பால் மொத்த படத்தையும் ரசிகர்களோடு கட்டி போட்டனர். படத்தில் பல இடங்களில் எமோசனல் சீன்களும், கிரிக்கெட் காட்சிகளும் சரியாக ஒர்க் அவுட் ஆனது அருண்ராஜா காமராஜாவின் இயக்குனர் அவதாரத்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. படத்தில் வரும் பல வசனங்கள் அந்தந்த சீனை விட அதிக பவர்புல்லாக இருந்தது.

விவசாயம் எவ்வளவு முக்கியம், விவசாயி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என உண்மைக்கு நெருக்கமான பல காட்சிகளே இந்த படத்தை வெற்றி படமாக்கியது. திபு நினன் தாமஸின் இசை, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு, ரூபனின் அனுபவம் வாய்ந்த எடிட்டிங் அனைத்துமே இந்த படத்திற்கு பிளஸ். சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த வருடம் வந்த பல படங்களில் ரசிகர்களுக்கு பாசிடிவ் எனர்ஜி கொடுத்த ஒரே படம் கனா மட்டுமே என்று கூட சொல்லலாம். இது போன்ற படத்தை 2019 இல் சிவகார்த்திகேயன் – அருண்ராஜா கூட்டணியில் எதிர்பார்க்கலாம். சாம்பியன் …… கனா…..

இரும்புத்திரை

நீண்ட இடைவெளிக்கு பின் விஷாலுக்கு வெற்றி கொடுத்த படம் இரும்புத்திரை. அறிமுக இயக்குனர் P.S. மித்ரன் இயக்கத்தில் டெக்னிகல் படமாகவும், இணையத்தால் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையை பேசும் படமாகவும் இருந்ததே இதன் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம். ஆதார், பிளைட் டிக்கெட், மொபைல் போன் என நாம் பயன்படுத்தும் அனைத்தும் எப்படி ஒரே நொடியில் எதிரியாகும் என்ற எச்சரிக்கை மணி அடித்ததற்காக இரும்புத்திரைக்கு சிறப்பு நன்றிகள். விஷால் படத்திலேயே 100 கோடிக்கு மேல் வசூலித்த படமும் இது தான் என கூறப்படுகிறது. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு காட்ட காரணமாக இருந்தது. மேலும் யுவனின் இசை, ரூபனின் எடிட்டிங் என அனைத்தும் ஷார்ப்.

அர்ஜுன் வில்லனாக கலக்கியது, விஷாலின் கமர்சியல் பார்முலா இல்லாதது, நம்பும் படியான காட்சிகள், மித்ரனின் திரைக்கதை என அனைத்தும் இரும்புத்திரையை 2018ன் சிறந்த படமாகவும், வெற்றி படமாகவும் மாற்றியது. பல க்ரைம்களை சினிமாவில் பார்த்த நமக்கு இந்த சைபர் க்ரைம் மூவி ஒரு வித்தியாசமான அனுபவம் தான். மேலும் முக்கியமான படமும் கூட…. இரும்பு….. திரை.. படம்..!!