மலையாளத்தில் மூத்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவநாயர் எழுதிய ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி உருவாக உள்ள மகாபாரதக் கதையை ரூ.1000 கோடி செலவில் பி.ஆர்.ஷெட்டி என்பவர் படமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும், படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க படத்திற்கான திரைக்கதையும் வேகமாக தயாராகி வருகிறது.
ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில், மகாபாரத் கதையில் வரும் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் நாகர்ஜுனாவும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நாகர்ஜுனா, “நான் தற்போது `ராஜு கரி கதீ-2′ படத்தில் நடித்து வருகிறேன். எனது அடுத்த படம் மகாபாரதக் கதையாக இருக்கலாம். கடந்த 4 வருடங்களாக மகாபாரதக் கதையை இயக்க, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும், ஸ்ரீகுமார் 2 வருடங்களுக்கு முன்பே, கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது என்னைத் தொடர்பு கொண்ட வாசுதேவன் மகாபாரதக் கதையில் நடிப்பதற்காக எனது தேதிகளை கேட்டிருக்கிறார். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால், நான் நடிக்க தயார் என்று கூறினேன். அதற்கு பதில் அளித்த வாசுதேவன், எனக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கவுள்ளதாக கூறினார். இதுகுறித்து படக்குழு என்னை மீண்டும் தொடர்பு கொள்ளும் போது அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.