full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சொன்ன தேதியிலேயே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவு நாளை மறுநாள் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுதான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி முன்னதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் எவ்வித குழப்பமுமின்றி தேர்வு முடிவுகளை எதிர் கொண்டனர். ஏற்கனவே அறிவித்தப்படி 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவு குறித்து இயக்குனர் வசுந்தராதேவி மேலும் கூறியதாவது:-

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதி காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும்.

தேர்வு முடிவுகள் பாதுகாப்புடன் அனைத்து மாவட்டத்திற்கு இன்று தனி வாகனங்களில் பாதுகாப்புடன் அனுப்பப்படுகிறது. முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு 19-ந்தேதி காலை வினியோகிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.