தி ரோடு – திரைவிமர்சனம்
த்ரிஷா, “டான்சிங் ரோஸ்” ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, M.S. பாஸ்கர், வேலராமமூர்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அருண் வசீகரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “தி ரோட்”.இப்படத்திற்கு கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
த்ரிஷா, சந்தோஷ் பிரதாப் ஜோடிக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இரண்டாவது கர்ப்பமடைகிறார் த்ரிஷா. தனது மகன் பிறந்தநாளுக்காக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு காரில் பயணப்படுகின்றனர் சந்தோஷ் பிரதாப்பும் அவரது மகனும்.
மதுரை அருகே செல்லும் வழியில் எதிரில் வந்த கார் நிலை தடுமாறி, சந்தோஷ் பிரதாப் வரும் வழியில் வந்து மிகப்பெரும் விபத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த விபத்தில் சந்தோஷ் பிரதாப்பும் அவரது மகனும் இறந்துவிடுகின்றனர்.
இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் த்ரிஷாவிற்கு கர்ப்பமும் கலைந்துவிடுகிறது. தனிமரமாக நிற்கதியாக நிற்கிறார் த்ரிஷா. தனது கணவர் இறந்த இடத்திற்குச் செல்லும் போது சிறிதாக ஒரு சந்தேகம் எழுகிறது த்ரிஷாவிற்கு…
இது தானாக நடந்த விபத்தல்ல.. இது ஒரு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட விபத்து என கண்டறிகிறார் த்ரிஷா.
யார் இந்த விபத்திற்கு காரணமானவர்.? எதற்காக செய்தார்கள்.? என்பதை த்ரிஷா கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தன் தோளில் சுமந்து செல்கிறார் த்ரிஷா. மிகவும் கனமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தியிருக்கிறார். தனது கணவன், மகன் இழப்பைக் கண்டதும் அதிர்ச்சியில் த்ரிஷா மயங்கி விழுவதும், பின் அதிலிருந்து மீண்டு வர எடுக்கும் முயற்சி என அந்த காட்சிகளை நடித்த போது தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை த்ரிஷா.
வித்தியாசமான கதையை மிகவும் வித்தியாசமான கோணத்தில் படமாக்கியிருந்தார் இயக்குனர். இரண்டு கதைகளை வேறு வேறு திசையில் பயணிக்க வைத்து இரண்டையும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க வைத்து மோதவிட்டது இயக்குனரின் அசாத்திய இயக்கத்திறமை.
டான்சிங் ரோஸின் ஷபீருக்கு இது ஒரு வித்தியாசமான படமாக அமைந்திருக்கிறது. தனது நேர்மைக்கு இந்த உலகம் அவரை எதுவரை இழுத்துச் சென்றது என்பதை உணர்ந்து, இனி சிங்கப்பாதை தான் என வேறு ஒரு பாதையில் பயணித்தது யாரும் எதிர்பாராத ஒன்று.
தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று, தனது தந்தை வேலா இராமமூர்த்தியிடம் கெஞ்சி அழும் காட்சியில் நம் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார்.
நடிகை செம்மலர் அன்னம் அவர்களுக்கு இது ஒரு மைல்கல் படம் என்று தான் சொல்ல வேண்டும். தன் கூட இருந்தவன் துரோகம் இழைத்துவிட்டான் என்று தெரிந்து அவனை கொலை செய்யும் காட்சியில் நடிப்பின் உக்கிரத்தை காண முடிந்தது.
படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரிடத்திலும் மிக கவனமுடன் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.
பல கார்களின் விபத்து காட்சிகளை மிகவும் தத்ரூபமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். ஒரு விபத்திற்குள் இப்படியெல்லாம் பண்ணுவார்களா என்று நம்மை அதிகமாகவே யோசிக்க வைத்து விட்டார் இயக்குனர்.
சாம் சி எஸின் பின்னணி இசை அதிரடி காட்டியிருக்கிறது. மீண்டும் தான் ஒரு பின்னணி இசையில் கிங் என்பதை நிரூபித்திருக்கிறார்.
கே ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவு அப்படி ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறது.
முதல் பாதியில் இருந்த ஒரு சுவாரஸ்யம், இரண்டாம் பாதியில் சற்று சறுக்கியிருக்கிறது என்பதை சொல்லி தான் ஆக வேண்டும்.
மொத்தத்தில்,
தி ரோட் – Good Raid
தி ரோடு – திரைவிமர்சனம்