என் திரையுலக பயணத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான படம் ‘தண்டேல்’

cinema news News
0
(0)

என் திரையுலக பயணத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான படம் ‘தண்டேல்’

 

கார் பந்தயம் என்பது பொழுதுபோக்கு தானே தவிர,அதில் முறையாக பயிற்சி எடுக்கவில்லை- நாக சைதன்யா

‘தண்டேல்’- ஒரு காதல் கதை தான் – நாக சைதன்யா

ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் ‘தண்டேல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மீனவ இளைஞனின் தேசபக்தி மிக்க உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த ‘தண்டேல்’ படத்திற்கு, படக்குழுவினர் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருகிறார்கள்.

இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தண்டேல் எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா சாய் பல்லவி கருணாகரன் ஆடுகளம் நரேன் பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சியாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரித்திருக்கிறார். எதிர்வரும் ஏழாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார் தமிழில் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வழங்குகிறார்.

படத்தைப் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில் படத்தைப் பற்றி தனது அனுபவங்களை நாயகன் நாக சைதன்யா பகிர்ந்து கொள்கிறார்.

சென்னையை பற்றி…?

சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலலானது.‌ என் வாழ்க்கை இங்கு தான் தொடங்கியது. சென்னையில் எனக்கு மறக்க முடியாத அனுபவம் நிறைய உள்ளது.

இப்படத்தில் நடிக்க தூண்டுதலாக இருந்த விசயம் எது?

இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் அனைத்து கமர்சியல் அம்சங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு காதல் கதை. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை பார்க்கும் ரசிகர்களும் இந்த காதலை நெருக்கமாக உணர்வார்கள்.

வழக்கமான நாக சைதன்யாவை விட இந்த திரைப்படத்தில் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. இது தொடர்பாக..!?

இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தின் திரை தோற்றம் குறித்து இயக்குநர் சந்து என்னை சந்தித்தபோது விவரித்தார். அதைக் கேட்டவுடன் நடிகருக்கு தன் திறமையை வெளிப்படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் என நம்பினேன். படத்தின் கதையும் விசாகப்பட்டினத்தில் அருகே உள்ள ஸ்ரீ கா குளத்திலிருந்து பயணித்து, குஜராத்திற்கு சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்குள்ள சிறைக்கு சென்று, அதன் பிறகு சொந்த மண்ணுக்கு திரும்புவது போன்ற நீண்ட பயணம். இது என்னை மிகவும் கவர்ந்தது.

அதன் பிறகு ஸ்ரீ கா குளத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறை- மொழி உச்சரிக்கும் பாணி- உடல் தோற்றப் பாணி- தொழில் சார்ந்த பாணி- ஆகியவற்றை குறித்து அவர்களிடம் உரையாடி தெரிந்து கொண்டேன்.

கடலுக்கு போகும் போது அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? அதனை எப்படி எதிர்கொள்வார்கள்? இதைப்பற்றியெல்லாம் விரிவாக கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழ ஒரு மாத காலம் வரை கடலிலேயே இருப்பார்களாம். கடலில் இருக்கும் போது அவர்களிடத்தில் இருக்கும் செல்போன்கள் செயல்படாது. அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகு இன்ஸ்பிரேஷன் ஆகி இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தயார் செய்து கொள்ள தொடங்கினேன். இது என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. என்னுடைய தோற்றமாகட்டும்… என்னுடைய உடல் மொழியாகட்டும்… என்னுடைய உள்ளூர் பேச்சு வழக்கு வசன உச்சரிப்பாகட்டும்… கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இதிலேயே லயித்திருந்தேன். இந்தப் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது.

‘தண்டேல்’ படத்தில் நான் நடித்த ராஜு கதாபாத்திரம் என்னை பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்பான அத்தனை உணர்வுகளும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது ஏற்பட்டது. மனிதர்களிடத்தில் பேரன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று என்பதையும் உணர்த்தியது.

இயக்குநருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இந்தப் படத்தின் கதை. இந்த படத்தின் பட்ஜெட். இதன் பிரம்மாண்டம். தயாரிப்பின் தரம்.. எல்லாம் எனக்கும், இயக்குநருக்கும் புதிது. இதுவரை எந்த திரைப்படத்திலும் இல்லாதது. மிகப் பெரிது.‌ இது இயக்குநரின் வளர்ச்சியைத் தான் காட்டுகிறது.‌

சந்து எனக்காக நிறைய சிந்திப்பார். அவர் இந்த படத்தில் என்னை புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சியாகட்டும்… சண்டைக் காட்சியாகட்டும்… நடன காட்சியாகட்டும்.. சந்து எப்போது எனக்கு ஆதரவாகவே இருப்பார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிப்பை தவிர்த்து உங்களின் பொழுதுபோக்கு என்ன?

நடிப்பை தவிர்த்து கார் பந்தயங்களில் ஈடுபாடு உண்டு. இதற்காக நான் சென்னைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் நடைபெறும் கார் பந்தயங்களை பார்வையிட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அது என்னுடைய பொழுதுபோக்கு மட்டும் தான். அதற்காக நான் முறையான பயிற்சியை எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் போது பந்தயக் கார்களை இயக்கிருக்கிறேன்.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவன்- எல்லையைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக அண்டை நாடான பாகிஸ்தான் அரசு கைது செய்து மீனவர்களை சிறையில் அடைக்கிறது.‌ அவர்கள் எப்படி சிறையிலிருந்து மீண்டார்கள்? அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் போராட்டம் எப்படி இருந்தது? இந்த உண்மை சம்பவத்தை தழுவி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் ‘தண்டேல்’ திரைப்படம் தமிழக மீனவர்களின் உணர்வையும் பிரதிபலிப்பதால் இந்த திரைப்படம் தமிழகத்திலும் மாபெரும் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏழாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.