தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட பலர் சிக்கினர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை இரவுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்திலும் மீட்பு பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்கியராஜ் கூறுகையில், காட்டுத்தீயில் சிக்கி 5 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கிருந்து மீட்கப்பட்ட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்துள்ளார்.