திருட்டுப்பயலே 2 – விமர்சனம்

Movie Reviews

2006ல் வெளியாகி வெற்றி பெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகமாக, சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் திருட்டுப்பயலே 2.

நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா, அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். நேர்மையாக இருப்பதால் ஏளனத்திற்கும், தொடர்ந்து இடமாறுதலுக்கும் ஆளாகிறார் பாபி சிம்ஹா. இதனால் மனம் வெறுத்துப் போகும் அவர், இனியும் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது எப்படியாவது சீக்கிரம் பணம் சம்பாதித்து செட்டில் ஆகி விட நினைக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு முக்கிய பிரமுகர்களின் ரகசியங்களை கண்டறிந்து சொல்லும் வேலை தரப்படுகிறது. அதற்காக அவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்கும் பாபி சிம்ஹா, அவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு, தனக்கு நெருக்கமானவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்கும் எண்ணம் ஏற்பட, அவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க ஆரம்பிக்கிறார். அப்போது சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் நட்புடன் பழகி, தனது ஆசைக்கு இணங்கச் செய்யும் பிரசன்னாவிடம் அமலா பால் சிக்கிக் கொண்டுள்ளதை அறிந்து கொண்டு, அவரை மீட்க முயல்கிறார்.

அந்த முயற்சியில் பாபி சிம்ஹாவிற்கும், பிரசன்னாவிற்கும் நடக்கும் யுத்தம் தான் படத்தின் கதை.

அமலா பாலுடனான காதல் காட்சிகளிலும், நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடனும் சிறப்பாக நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. அதே நேரத்தில் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது என்று நினைத்து, மனம் மாறி வில்லத்தனம் பண்ணும் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடக்கும் பெண்ணாகவும், பாபி சிம்ஹாவுடன் காதல் காட்சிகளிலும், பிரசன்னாவிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளிலும், பிரசன்னா கொடுக்கும் தொல்லைகளை பாபி சிம்ஹாவிடம் சொல்லமுடியாமல் திணறும் காட்சிகளிலும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

சமீபத்திய படங்களில் எல்லாம் துணை கதாபாத்திரமாக வந்து போன பிரசன்னாவிற்கு இந்த படத்தில் அவரது நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரம். வில்லத்தனத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார். இவரின் கதாபாத்திர அமைப்பு முரண் படத்து பிரசன்னாவை நினைவுபடுத்துகிறது.

முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் பெண்கள் என்னென்ன தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் சுசி கணேசன். தற்போதுள்ள தொழில்நுட்பங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் தெளிவாக பதிவு செய்திருக்கிறார். கதாநாயகன் வில்லனை வென்றே தீர வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியை கதையில் திணித்ததை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பக்கா ரகம். கலை இயக்குநரின் கைவண்ணத்திலும், நேர்த்தியான ஒளிப்பதிவிலும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன.