full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியது – இயக்குனர் பாரதிராஜா

டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘’சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் ஓ.டி.டி. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது. தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட் விலையை விட பாப்கான், பார்க்கிங் விலை அதிகம்.

ஒருசாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்? விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம். தியேட்டரில் 35 சதவிகிதம் முதல் 50 சதவீதத்துக்குள் சமூக இடைவெளியுடன் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம், 50 சதவீதம் மக்களைஅனுமதித்தால்கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனைவாரங்கள் திரையிடப்படும்? ஏற்கனவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை.

சமீபநாட்களில் ஓ.டி.டி.க்கு எதிரான பிரச்சினையை சூர்யாவுக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்ளது. திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒரு சிலரே அதில் சூர்யாவும் குறிப்பிடத் தகுந்தவர். சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் ஓ.டி.டி.யில் வரக்கூடாது, திரையில்தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றுதான், அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டுவர முன்வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில் சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக்கூடாது. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண ஓ.டி.டி. சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணத்தில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும். அவரது சூரரைபோற்று படம் முத்திரை பதிக்கும்.”

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.