மலை கிராமம் ஒன்றில் நகரத்தின் வாழ்க்கைமுறைக்கு சம்பந்தமே இல்லாத மக்கள் தங்கள் வாழ்விடத்திற்காகப் போராடும் கதை.
நாசர் கிராமத் தலைவர் மூப்பனாக நடித்திருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன், வினோத் கின்னி ஆகியோர் அந்த கிராமத்து இளைஞர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.. படத்தில் நிறைய அறிமுகங்கள் நாயகிகள் உட்பட.
மலை கிராமத்திற்கு அரசாங்கம் பட்டா போட்டுத் தந்த இடத்தை வனத்துறை அமைச்சர் அபகரிக்கத் திட்டம் போடுகிறார். வழக்கம்போல அவருக்கு ரேஞ்சர், காவல்துறை அதிகாரி, கலெக்டர் எல்லோரும் உடந்தை. வழக்கம்போல கிராம மக்கள் புலி அடித்ததாக கொல்லப்படுகிறார்கள். வழக்கம்போல அவர்கள் மீது பொய் வழக்குப் போடப்படுகிறது. வழக்கம்போல சிறையில் ஒரு இளைஞர் கொல்லப்படுகிறார். வழக்கம்போல இளைஞர்களுக்கு கோபம் வருகிறது, என படத்தில் ஏகப்பட்ட ” வழக்கம்போல” காட்சிகள்..
சிறைக்குள் போராளி கைதியாக வரும் அஜய் ரத்தினம் எடுக்கிற “புரட்சி” பாடத்தில் ஒரே காட்சியில் அந்த இளைஞர்கள் போராளிகளாக மாறி திட்டம் தீட்டி கிராமத்தை மீட்கிறார்கள்..
படத்தில் எல்லா காட்சிகளுமேத் துண்டு துண்டாய் நிற்கிறது. ஒளிப்பதிவு, இசை என எதுவுமே ஒட்டவில்லை.
K3 கிரியேஷன்ஸ் சார்பில் சீனிவாசராவ் தயாரிப்பில் பிரதாப் முரளி இயக்கியிருக்கும் திட்டிவாசல், புரட்சி போராட்டம், கம்யூனிசம் என கதைசொல்ல நினைத்து வலுவில்லாத காட்சி அமைப்பு, வலுவில்லல்லாத திரைக்கதை என மொத்தமாய் சறுக்கியிருக்கிறது.