தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு மோசமான ஜாதி ஆணவ படுகொலைகளை மையப்படுத்தி வெளிவந்திருக்கிறது “தொட்ரா” திரைப்படம்.
பிரித்விராஜன், வீணா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்கி இருக்கிறார் மதுராஜ். எம்.எஸ்.குமார் நாயகியின் அண்ணனாகவும், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் காதலர்களை சேர்த்து வைப்பது போல் நாடகமாடும் கட்டப்பஞ்சாயத்து செய்பவராகவும் நடித்திருக்கிறார்கள்.
ஜாதிவெறி மிகுந்த எம்.எஸ்.குமாரின் ஒரே தங்கை வீணா. குடும்பமே அவர் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். எம்.எஸ்.குமார் அந்த பகுதியில் ஜாதி மாறி காதலிக்கும் ஜோடிகளை எல்லாம் பிரித்து வைப்பதும், மீறுபவர்களை கொலை செய்வதுமாக வலம் வருகிறார். கல்யாண வீடுகளில் கூட, ஜாதிவெறிப் பேச்சுக்களை பேசுபவராக இருக்கிறார். இதனால் எம்.எல்.ஏ சீட் அவருக்குக் கிடைக்குமென நம்புகிறார்.
இதற்கிடையில் வீணாவிற்கு, பிரித்விராஜனின் மீது காதல் உண்டாகிறது. பிரித்விராஜன் வேறொரு ஜாதிப் பிரிவை சார்ந்தவராக இருக்கிறார். இதனை அறிந்த எம்.எஸ்.குமார் இருவரையும் பிரித்து, பிரித்விராஜனை கொலை செய்ய முயற்சிக்கிறார்.
அவர்களிடம் “இனி உங்க தங்கச்சிய பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்” என கெஞ்சிக் கதறி உயிர் பிழைத்து வருகிறார் பிரித்விராஜன்.
இருந்தாலும் வீணாவை மறக்க முடியாததால், நண்பர்கள் உதவியுடன் வீணாவை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறி ஏ.வெங்கடேஷிடம் தஞ்சம் அடைகிறார்கள். அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கிற ஏ.வெங்கடேஷ், பிறகு அவரது சுய ரூபத்தைக் காட்டுகிறார்.
ஒரு பக்கம் ஜாதி வெறி எம்.எஸ்.குமார், இன்னொரு பக்கம் கட்டப்பஞ்சாயத்து ஏ.வெங்கடேஷ் இருவரிடத்தில் இருந்தும் பிரித்விராஜனும், வீணாவும் தப்பித்தார்களா? என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லி இருக்கிறார்கள்.
ஜாதிப் பிரச்சினையை கையாள்வதில் இயக்குநருக்கு நிறைய குழப்பங்கள் இருந்திருக்கும் போல. எந்தப் பக்கம் நின்று “தொட்ரா” திரைப்படம் பேசுகிறது என்பதை கடைசி வரை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனினும், பலரும் பேசத் துணியாத விசயத்தை கையில் எடுத்துக் கொண்டதற்கு வாழ்த்துகள்.
ஏ.வெங்கடேஷின் கதாபாத்திரம் படத்திற்குத் தொடர்பில்லாததாகவே படுகிறது. காதலர்களுக்கு உதவி செய்கிற சில அமைப்புகளை மோசமானவையாக சித்தரிக்கும் முயற்சியோ எனத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.
அதேபோல கிளைமாக்சில், எம்.எஸ்.குமாரின் மனைவியாக வருபவர் எடுக்கிற முடிவு அதிர்ச்சியை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், ஜாதியின் இருப்பைக் காப்பாற்றுவதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது என்ற உண்மையை உடைத்திருக்கிறது.
உத்தமராசா இசையில் சிம்பு பாடிய “பக்கு பக்கு” பாடல் ரசிக்க வைக்கிறது. வி.செந்தில்குமார் ஒளிப்பதிவும், ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது.
“இந்த மண்ணில் ஜாதி ஒழிவதற்கு காதல் திருமணங்களே வழி” என்கிற வலிமையான கருத்துடன் வந்திருக்கும் எளிமையான திரைப்படம் இந்த “தொட்ரா”.