full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

ரஜினிகாந்துக்கு மிரட்டல் கடிதம்

மும்பையில் பிரபல தாதாவாக விளங்கியவர் ஹாஜி மஸ்தான். இவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பாரதீய சிறுபான்மையினர் பாதுகாப்பு கட்சியின் தலைவர் சுந்தர் சேகர் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாரதீய சிறுபான்மையினர் பாதுகாப்பு கட்சியின் நிறுவனரான நான், ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன். சமீபத்தில் பத்திரிகைகள் மூலமாக, நீங்கள் இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து எனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க உள்ளதை தெரிந்து கொண்டேன். நீங்கள் எனது தந்தையை கடத்தல்காரர், நிழல் உலக தாதா போல சித்தரித்து படம் எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது தந்தையை தவறாக சித்தரித்து படம் எடுப்பதை எதிர்க்கிறேன்.

ஹாஜி மஸ்தான் கடத்தல், தாதா வழக்குகளில் குற்றவாளி என எந்த ஒரு இந்திய நீதிமன்றமும் தீர்ப்பு அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் அவரை நிழல் உலக தாதா, கடத்தல்காரர் என அழைப்பதோ, சித்தரிப்பதோ அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.

நாங்கள் 2 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சிறுவயதில் இருந்து நான் அவருடன் இருந்தேன். அவர் என்னை சொந்த மகனாகவே வளர்த்தார். ஆனால் மதம் மாறும்படி ஒருநாளும் என்னை வற்புறுத்தியது இல்லை. அவர் எங்கு, எப்போது சென்றாலும் நான் அவருடன் செல்வேன். என்னைப்போல வேறு யாரும் அவருடன் நெருங்கிப் பழகியது கிடையாது.

நீங்கள் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க விரும்புகிறீர்கள் என்றால் நான் உங்களுக்கு அவரைப் பற்றி சொல்கிறேன். எனக்கும் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் தயாரிப்பாளர் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளேன்.

ஹாஜி மஸ்தானுக்கு மிகப்பெரிய அரசியல் பின்புலம் உண்டு. நிழல் உலக தாதா, கடத்தல்காரர் என அவரை தவறாக சித்தரிப்பவர்கள் மீது அவரது ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர். நீங்கள் ஹாஜி மஸ்தானை தவறாக சித்தரிக்கும் வகையில் படம் எடுத்தால் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.