full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

துடிக்கும் கரங்கள் திரைவிமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டல் துடி க்கும் கரங்கள் டைட்டலில் வெளிவந்து இருக்கும் இந்த படம் சூப்பர் ஸ்டார் வெற்றியை தக்க வைக்க முடிகிறதா என்று பார்ப்போம்.

விமல், மிஷா நரங், சுரேஷ் மேனன், சங்கிலி முருகன்,சௌந்தர்ராஜா,ஆனந்த் நாக்,சுபிக்ஷா மற்றும் பலர் நடிப்பில் ராகவ் பிரசாந்த் இசையில் வேலுதாஸ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் துடிக்கும் கரங்கள்.

நாயகன் விமல் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருவதோடு, அதன் மூலம் மக்கள் பிரச்சனைகளை பேசி வருகிறார். இதனால், அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வருகிறது. இருந்தாலும் ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கிறார். இதற்கிடையே, சென்னையில் படிக்க வந்த இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போகிறார். அவரை தேடி அலையும் அவரது தந்தைக்கு உதவி செய்யும் நோக்கில் அந்த இளைஞர் பற்றிய தகவல்களை தனது யூடியுப் சேனலில் விமல் வெளியிடுகிறார். அதை தொடர்ந்து அந்த இளைஞர் பற்றி விமலுக்கு தெரிய வரும் சில தகவல்களை வைத்து அவரை தேடும் போது, மர்மமான முறையில் இறந்த ஐஜி-மகளுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வர, இருவர் பற்றியும் தொடர்ந்து விசாரிக்கும் போது ஐஜி மகளின் மரணம் கொலை என்ற உண்மையை விமல் கண்டுபிடிக்கிறார். இதனால் விமலை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்த, ஐஜி மகள் கொலை மற்றும் காணாமல் போன இளைஞர் பற்றிய உண்மைகளையும், இதன் பின்னணியில் இருப்பவர்களையும் விமல் எப்படி கண்டுபிடிக்கிறார்?, என்பதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் முறையாக ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் படத்தில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனால், இந்த கதையில் அவர் வழக்கமான பாணியிலேயே நடித்திருப்பதை தவிர்திருக்கலாம். படம் முழுவதும் மாடர்ன் உடையில் யூத்தாக வலம் வந்தாலும், உடல் மொழியில் எந்தவித மாற்றமும் இன்றி அதே பழைய விமலாகவே வருகிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் நாம் ஏற்கனவே பார்த்த விமல் தான் என்றாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் சற்று புதிய விமலாக ரசிக்க வைக்கிறார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஐஜி வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ் மேனனின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனை. ஆனால், அப்படி ஒரு வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ் மேனனின் ரியாக்‌ஷன் மட்டும் எல்லாம் காட்சிகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செளந்தரராஜனின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் அமர்க்களமாக அறிமுகமானாலும், அதன் பிறகு வரும் காட்சிகளில் அவர் டம்மியாக்கப்படுகிறார். இருந்தாலும், தனக்கு கொடுத்த வேடத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.

ஐஜி மகளின் கொலையில் இருக்கும் மர்மத்திற்கு பின்னணியில் இயக்குநர் வைத்திருக்கும் ட்விஸ்ட் எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொள்ள செய்கிறது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஐஜி மகளின் கொலையால் ஆரம்பமே படம் எந்த பிரச்சனை பற்றி பேசப்போகிறது என்பதை யூகித்து விட முடிகிறது. இருந்தாலும், பிரியாணி மேட்டரை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் வேலுதாஸ்.

மொத்தத்தில், ‘துடிக்கும் கரங்கள்’ குறையில்லை.

ரேட்டிங் 3/5