மிஷ்கின் இயக்கத்தில், விஷால், பாக்யராஜ், அனு இமானுவேல், பிரசன்னா, வினய் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’.
எதையும் தன் அறிவாற்றலால் திறமையாக துப்பறிந்து விடும் விஷாலுக்கு, அவருடைய திறமைக்கு தீனி போடும் அளவுக்கான எந்த ஒரு வழக்கும் சிக்காமல் இருக்கிறது. அப்போது சிறுவன் ஒருவன் தன்னுடைய நாய்க்குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாகவும், அவனைக் கண்டுபிடித்து தருமாறும் விஷாலிடம் கேட்கிறான்.
இதனை ஏற்றுக் கொண்ட விஷால் அது குறித்து துப்பறியும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. அதில், இயற்கையான மரணமாக சித்தரிக்கப்பட்ட, சிம்ரனின் கணவனாக வரும் வின்செண்ட் அசோகன் என்பவரது இறப்பும், போலீஸ் அதிகாரியான ஆடுகளம் நரேன் இறப்பும் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்பது தெரிய வருகிறது.
அவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்? என்பதை விஷால் துப்பறிந்து கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷால் இதுவரை பார்த்திராத வித்தியாசமான துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் தனது அலட்டிக்கொள்ளாத நிதானமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.
விஷாலுக்கு அடுத்ததாக நெஞ்சில் நிற்பவர் வினய். வினய்க்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல். தற்போதைய டிரெண்டிங் ஸ்டைலிஷ் வில்லன் லிஸ்டில் வினயும் இடம்பிடித்து விட்டார். ஒரு கப் காபி, ஒரு கொடூர கொலை என்று வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார்.
பிரசன்னா,அனு இமானுவேல், ஆண்டிரியா என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். துப்பறியும் கதையை தனக்கே உரித்தான திரைக்கதையில் அழகாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின். திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை கதையின் ஓட்டத்தில் பயணிக்கச் செய்கிறது.
இயக்குநர் பாக்யராஜூக்கும் வித்தியாசமான கதாபாத்திரம். அவர் கொலையாகும் காட்சியில் தனது அனுபவ நடிப்பால் அனுதாபத்தைப் பெற்று விடுகிறார்.
அரோல் கரோலியின் பின்னணி இசையும், கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.
சினிமாவின் பார்வையில் ’துப்பறிவாளன்’ – துல்லியம்