கோடைகாலம் வந்தால் இப்பொதெல்லாம் ஐபிஎல் ஜுரம் தான் என்ஃப்க்கு பார்த்தாலும். அதுவும் இந்த ஆண்டு தடை நீங்கி சென்னை அணி மீண்டும் விளையாட வருவதால் தமிழகம் எங்கும் எங்கு பார்த்தாலும் “சிஎஸ்கே.. சிஎஸ்கே” தான்..
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 10-ந் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் மோதும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை விவரம் வெளியாகி இருக்கிறது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.1,300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 (பெவிலியன் டெரஸ்) ஆகும்.
மேலும் ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆன்-லைனிலும், ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதற்குரிய தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படுகிறது.