full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

பா ரஞ்சித் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கருத்து

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது. “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்.” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைத்தது.

‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கனிமொழி, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சு.திருநாவுக்கரசர், கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன், கு.ஜக்கையன், சதானந்த் மேனன், மதிவண்ணன், சத்யராஜ், கலையரசன், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, மீரா கதிரவன், சுசீந்திரன், உஷா, லெனின் பாரதி, ஆடம் தாசன், எங்கேயும் எப்போதும் சரவணன், நலன் குமாரசாமி, ஸ்ரீகணேஷ், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், நிரோ பிரபாகர், கவிஞர் உமாதேவி, கவிஞர் சல்மா, அஜயன் பாலா, ஆனந்த் குமரேசன், முருகன் மந்திரம், முத்தமிழ் கலைவிழி, கவிதா முரளிதரன், கவின்மலர், பிரேமா ரேவதி, திவ்யபாரதி, விஜி பழனிசாமி, கொண்டை வெள்ளை, அன்பு வேந்தன் உள்பட இன்னும் பெயர் குறிப்பிடாத பல்துறைப் பிரபலங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொள்ள அரங்கம் நிரம்பி வழிந்தது.

60 நாடக கலைஞர்கள் தெளிவான ரிகர்சலுக்குப் பின் அரங்கேற்றிய, “மஞ்சள்” நாடகத்தை எழுதியவர், ஜெயராணி. இயக்கியவர் ஸ்ரீஜித் சுந்தரம், மேற்பார்வை செய்தவர்கள் பாரதி செல்வா மற்றும் சரவணன்.

நாடகத்திற்கு பின் நிகழ்ந்த கருத்துரையில், திருமாவளவன், ஜக்கையன் பேசிய போது இது யாருக்கான நாடகம், யாருக்கு செல்லவேண்டும் என்று தெளிவாக எடுத்துச்சொன்னார்கள்.

திருமாவளவன் பேசுகையில், “சாதியத்தை ஒழித்தால் தான், மலம் அள்ளுவதை ஒழிக்க முடியும். காந்தியம் சாதியை அழித்தொழிக்க எப்போதும் உதவாது. அம்பேத்கரியம் தான் சாதியை அழித்தொழிக்க முடியும். காந்தி சுத்தம் செய்யும் தொழிலை புனிதம் என்றார். அது சேவை என்றார். அது தொடர வேண்டும் என்றார். எனவே காந்தியம் சாதியை ஒழிக்க உதவாது, அம்பேத்கரியம் தான் அதைச்செய்ய முடியும்.” என்றார்.

இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில், ‘எல்லா சாதியிலயும், சாதி வேணும்னு சொல்றவன விட வேணாம்னு சொல்றவன்தான் அதிகமா இருக்கான். அவன்லாம் அமைதியா இருக்கறதாலதான் சில சில்லரைக சத்தம் அதிகமா கேக்குது. இனி அவங்க எல்லாரும் பொதுவில் வந்து பேசணும். சாதி ஒழியணும்’ என்று குறிப்பிட்டார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், ‘மனுசனே மனுச மலம் அள்ளுற வேலைய நிறுத்தறதுக்கு ஒரு சிம்பிள் வழி இருக்கு. வாரம் ஒவ்வொரு சாதிக்காரன் மலம் அள்ளணும்னு சொல்லிப் பாருங்க. உடனே டிசைன் டிசைனா மெஷின் கண்டுபுடிச்சு மலத்த அள்ள ஆரம்பிச்சுருவானுங்க.’ என்ற பகடியாக பேசினாலும் உண்மை நிலையை சொன்னார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், “இந்த நாடகம் பேசிய கருத்துகள் அனைத்தும் உண்மை, கையால் மலம் அள்ளும் இழிவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. அதற்காக முன் வந்திருக்கும் தம்பி இரஞ்சித்திற்கு பாராட்டுகள். வேறு யாரும் இதைச்செய்ய முன் வரவில்லை. எனவே இரஞ்சித் முன்வந்திருக்கிறார். அவரை பாராட்டவேண்டியது என் கடமை. சின்ன சின்ன விசயங்கள் தவிர மொத்த நாடகமும் மிகச்சிறப்பு.” என்றார்.

இயக்குநர் நலன்குமாரசாமி பேசுகையில், “இரஞ்சித் எங்கள் தலைமுறையில் இருப்பது எங்கள் அனைவருக்குமே பெருமையான விசயம்.” என்றார்.

இறுதியில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித், ‘இத்தனை நாள் எங்க வலியா மட்டுமே இது இருந்துச்சு. அத நீங்களும் உணரணும்னு தான் இதை நாடகமா போட்டோம். எந்த ஒரு விசயமும் கலை மூலமா போகும் போது தான் ஒரு விஷயம் நிறைய மக்களைச் சென்றடையும். அதுதான் நம்ம இலக்கு. இது நமக்கான உரிமை, நாமளே அதை எடுத்துக்குவோம்.’ என்று முடித்தார்.

இந்த நிகழ்வில் ஒரு அங்கமாக கையால் மலம் அள்ளுவதற்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் களப்பணி ஆற்றுகிற, கொண்டை வெள்ளை, அன்புவேந்தன், “கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும் மஞ்சள் வண்ணம், மலத்தையும் அடையாளப்படுத்துவதால், அதற்கு எதிராக, நிரோ பிரபாகர் இசையில், ஜெயராணி எழுதியுள்ள “மஞ்சள் எதிர்ப்புப்பாடல்” (Anti Yellow – Compaign Song) வெளியிடப்பட்டது.

இந்த நாடகம் மேடையேறுவதற்கு முழு காரணமாகவும் இருந்துள்ளார் இயக்குனர் ரஞ்சித். வணிக சினிமாவின் உச்சத்தில் செயல்பட்டாலும், தன் அரசியலில் இருந்து கொஞ்சமும் கலையாமல், கலையை தான் நம்பும் அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்துவதோடு நிற்காமல், அப்படி பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் மேடையாகவும் இருக்கிறார்.

கையால் மலம் அள்ளும் இழிவைப்பற்றி, அதனால் பாதிக்கப்பட்டவர்களே பேசிக்கொண்டிருக்காமல் பொதுவெளியில் பொது சமூகத்தில் அதை ஒரு பேசு பொருளாக, விவாதப்பொருளாக மாற்ற இந்த நிகழ்வு முதல் புள்ளியை வைத்திருக்கிறது. இன்னும் இதை அடுத்தடுத்த கட்டத்திற்கும் அனைவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு என்றார் பா.இரஞ்சித். அதுதான் உண்மை. அது தான் இன்றைய தேவையும் கூட.