full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கால் அவதிப்பட்ட மக்கள்

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பள உயர்வு 2.57 மடங்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

அரசு தரப்பில் மூன்று விதமான சம்பள உயர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டது. பணியில் சேர்ந்து ஆறு வருடங்களுக்கு குறைவான ஊழியர்களுக்கு 2.44 மடங்கும், 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருப்பவர்களுக்கு 2.41 மடங்கும், 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுக்குள் பணியில் சேர்ந்தவர்களுக்கு மூன்று மடங்கு சம்பள உயர்வும் தர அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

அரசின் முடிவை 30 தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. என்றாலும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் தங்களது சம்பள உயர்வு கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். ஆனால் அதை ஏற்க அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதையடுத்து நேற்று மாலையே அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

சென்னையில் நேற்றிரவு 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 தொழிற்சங்கத்துடன் மீண்டும் பேச்சு நடத்தப் போவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது.

90 சதவீதம் பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை. சென்னையில் இன்று காலை 35 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் மிக, மிக குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் இன்று 2-வது நாளாக தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் நிறுத்தப்பட்டதால் வெளி மாநிலத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று காலை தவிப்புக்குள்ளானார்கள். பஸ்கள் இல்லாததால் அவர்கள் ரெயில், ஷேர் ஆட்டோக்களை நாட வேண்டியதிருந்தது.

இதையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.