“எனை நோக்கி பாயும் தோட்டா”, “துருவ நட்சத்திரம்” என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களை ஆரம்பித்து ஆரம்பத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய “ஸ்டைலிஷ்” இயக்குநர் கௌதம், போகப்போக இரண்டு படங்களையும் முடிக்காமல் சவ்வாக இழுக்க ஆரம்பித்தார். கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த இரண்டு படங்களும் ஒருவேளை ட்ராப் ஆகிவிடுமோ? என ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் தர்புகா சிவா இசையில் “விசிறி”, “நான் பிழைப்பேனோ” என இரண்டு பாடல்களை வெளியிட்டு “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்திற்கு உயிரூட்டினார் கௌதம். அதேபோல, “துருவ நட்சத்திரம்” படத்திற்கு டீசர், டிரைலர் என அவ்வப்போது வெளியிட்டு எதிர்பார்ப்பை தக்க வைத்து வந்தார். ஆனால் என்ன பிரயோஜனம்?, இரண்டுமே முடிந்த பாடில்லை.
இடையில் “நரகாசூரன்” படத்தின் பிரச்சனை, “ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட்” சார்பில் தனிப்பாடல்கள், குறும்படங்கள் தயாரிப்பது என கௌதம் பிஸியாகவே இருந்தார். இந்நிலையில் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் படப்பிடிப்பை படுஸ்பீடாக முடுக்கி விட்டிருக்கிறார் கௌதம். ஏற்கனவே முக்கால்வாசி படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் சசிகுமார், தனுஷ் ஆகியோர் கலந்துகொண்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கௌதம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் படத்திற்கான புதிதாக வடிவமைக்கப்பட்ட போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். இப்போது, படத்தில் இருந்து “விசிறி சூட்” என்ற ஆடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.