தியேட்டர்களில் படங்களை திரையிட கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வராமல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. நேற்று 14-வது நாளாக போராட்டம் நீடித்தது.
நாளை (16-ந்தேதி) முதல் சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட அதிபர்கள் போராட்டத்தால் இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகாமல் முடங்கி உள்ளன. தியேட்டர்களில் பழைய படங்களையே மீண்டும் திரையிட்டு வருகிறார்கள்.
இதனால் கூட்டம் குறைந்துள்ளது. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. புதிய படங்கள் வெளியாகாததால் இதுவரை ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து நாளை முதல் தியேட்டர்களை மூடப்போவதாக திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்து உள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக திரையுலகம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலையில் உள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திரையுலக பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. பட அதிபர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.