சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த ‘நரிவேட்டை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் ஊரில் உள்ள முக்கியமான நான்கு பேரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அந்த பெண்ணின் நிலை அடுத்து என்ன ஆனது, அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் என்பது தான் இந்தப்படத்தின் கதை,
சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் அசோக் லோதா, ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள்.
பொதுவாக போராட்டக் களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற ட்ராபிக் ராமசாமி இந்நிகழ்ச்சியில் பேசும் போது, “இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நான் நடிப்பை செயலில் காட்டுபவன். சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக தனி ஆளாக போராடினால் மட்டும் போதாது. மொத்தமாக ஒன்று திரண்டு போராட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர்.
இந்தப்படத்தில் இவர் நடித்துள்ள வேம்புலி கேரக்டரை பார்க்கும் போது ட்ராபிக் ராமசாமி என்கிற பெயரைத் தான் வேம்புலி என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறேன். இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச்சுற்றி இருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடிகொடுக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்.” என வாழ்த்திப் பேசினார்.
இயக்குனர் (ஆகாஷ்) சுதாகர், கேன்சரினால் உயிர்நீத்த தனது மகன் ஆகாஷின் நினைவாக தனது பெயரை ஆகாஷ் சுதாகர் என மாற்றிக்கொண்டவர். மகனின் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பதற்காகவே திரைப்படம் எடுக்க முன்வந்தவர். இந்த நரிவேட்டை படத்தை முடித்த கையுடன், அடுத்ததாக ஒரு படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, இப்போது மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.