தயாரிப்பாளர்கள் சங்கம்! சர்ச்சை! – தேனாண்டாள் முரளி முன்னேற்றத்தில் தடுமாறும் T.R. ராஜேந்தர் மற்றும் தேனப்பன்!-

Uncategorized

தமிழ் சினிமாவின் தலைமை அமைப்பாக இருப்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். மறைந்த முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் முயற்சியால் தொடங்கப்பட்ட இச்சங்கம் தமிழ் சினிமா வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்திருக்கிறது. இச்சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி என தயாரிப்பாளர்களால் அழைக்கப்பட்ட கங்காதரன் தொடர் முயற்சியால் 170 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த சங்கம் 4000 க்கும் அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் பலம் மிக்க அமைப்பாக ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. இச்சங்கத்திற்கு கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே. முரளிதரன், பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கேயார், இராமநாராயணன், S.A.சந்திரசேகர்,கலைப்புலிதாணு, விஷால் கிருஷ்ணன் போன்றவர்கள் தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார்கள் இருந்தபோதிலும் கே.ஆர்.ஜி மூன்று முறையும் இராம.நாராயணன் இருமுறையும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்களாக இருந்த காலங்களே பொற்காலமாக இருந்தது என்று இன்று வரை கூறப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளை கடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நவம்பர் 23 அன்று நடைபெற உள்ளது தலைவர் பொறுப்புக்கு ராமசாமி முரளி, T. ராஜேந்தர், தேனப்பன் ஆகியோர் முதல் முறையாக போட்டியிடுகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்த நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் அதனை கடுமையாக எதிர்த்தனர். நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை வந்தால் விஷால் யாருக்காக பேசுவார், தொழில்முறை கதாநாயகன் தினந்தோறும் பிரச்சினைகள் வரக்கூடிய தயாரிப்பாளர்கள் சங்க பணிகளை எப்படி பார்க்க முடியும் என்ற காரணத்தால்.

தொழில் முறை தயாரிப்பாளர்கள் இடையே ஒற்றுமை இல்லாததால் நடிகர்களும், இயக்குனர்களும் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சரிவு அன்று தொடங்கியது. விதை நெல்லாக பாதுகாக்கப்பட வேண்டிய அறக்கட்டளை சேமிப்பு ஒட்டுமொத்தமாக செலவழிக்கப்பட்டு தற்போது சங்கத்திலும், அறக்கட்டளையிலும் சங்கத்தின் அன்றாட செலவுகளுக்கே நிதி இன்றி போனது தயாரிப்பாளர்கள் சங்கம்.

சங்கத்தின் நிதியையும், சங்க கெளரவத்தையும் கட்டிக்காத்த இராம.நாராயணன் வாரிசாக பிரம்மாண்ட  படங்களை தயாரித்து வெற்றி கண்ட ராமசாமி முரளி ராமநாராயணன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஏப்ரல் மாதம் அறிவித்தார் அன்று தொடங்கிய ஆதரவு அலை இன்று வரை குறையாமல் அதிகரித்து வருகின்றது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இவரது நேரடி போட்டியாளராக கருதப்படும் இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்ட டி. ராஜேந்தர் வெற்றி வாய்ப்பு பற்றி குறிப்பிட்ட தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில்,

தயாரிப்பாளர்கள் நலன் காப்பேன் என கூறி வாக்கு கேட்கும் T.R. தனது மகன் சிலம்பரசனையே படப்பிடிப்புக்கு ஒழுங்காக அனுப்ப முடியவில்லை அதனால் பல தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளனர் இந்த நிலையில் விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருப்பவர் தயாரிப்பாளர்கள் சங்க பணிகளை எப்படி கவனிக்க முடியும் தயாரிப்பாளர்- விநியோகஸ்தர்களுக்கிடையே பிரச்சினை வந்தால் அவரால் எப்படி நேர்மையான முடிவு எடுக்க முடியும் அதனால் தான் ராமசாமி முரளி தேர்தல் களத்தில் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் ஆதரவுடன் முதல் இடத்தில் இருக்கிறார் என்றார்.