full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது.. அடுத்த மெர்சல்!

ஒரு சாமாணியனை இந்த அதிகார வர்க்கம் விரட்டி விரட்டி வெளுக்கும், புராட்டி புரட்டி அடிக்கும். மாறாக ஒரு சாமாணியன் அதிகாரத்திற்கெதிராய் பேசிவிட்டால் அதிகார மாயையில் இருக்கும் அத்தனை வேர்களும் சிலிர்த்தெழும். கூக்குரலிடும்.

அப்படித்தான் இருக்கிறது, இந்த “தானா சேர்ந்த கூட்டம்” விவகாரமும். ஒரு பாடலின் வரிகளைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத மன நிலையில் தான் இன்றைய அதிகார, ஆளும் வர்க்கம் இருக்கிறது போல.
இது போன்ற வரிகளை எழுதத் தூண்டுவது யார்? ஏன் இவர்களெல்லாம் இதுபோல வரிகளை எழுதுகிறார்கள்? என்ற குறைந்தபட்ச சுயபரிசோதனைக்குக் கூட இவர்களெல்லாம் தற்போது தயாரகவே இல்லை.
மாறாக அடக்குவதினாலும், ஒடுக்குவதினாலும் நாம் கருத்துகளை, விமர்சனங்களை வெல்லலாம் என்கிற தாழ்வான மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இதிலெங்கே ஜனநாயகம் இருக்கிறது. இதிலெங்கே சுதந்திரம் இருக்கிறது? அனால் பெயர் மட்டும் ஜனநாயக நாடு!

இந்த சமூகத்தின் மீதான குறைந்தபட்ச அக்கறை இருப்பவனுக்குக் கூட தெரியும் இந்திய அதிகார வர்க்கத்தின் திமிர். கருத்துகளை கருத்தால் எதிர்கொள்கிற அரசியல் பண்பாடு மலையேறி நெடுங்காலமாகி விட்டது.
அதிலும் சினிமாக்காரன் கருத்து சொல்லிவிட்டால் வரிசை கட்டிக் கொண்டு கரைவேட்டிகள் எல்லாம் கோடம்பாக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது இப்போதெல்லாம்.
உப்பு சப்பில்லாத விஷயங்களைக் கூட ஊதி பெரிதாக்கி சுய லாபமடையப் பார்க்கும் கும்பல்களுக்கு மத்தியில் இந்த சினிமா படும் பாடு அப்பப்பா.. சொல்லி மாளாது.

கெட்டது ஆயிரம் சொல்லும் போது அமைதியாய்க் கிடப்பவர்கள், நல்லது ஒன்று கூட வெளியே வந்துவிடக் கூடது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட எல்லோருக்குமே கொள்கைப் பிடிப்போ,
கருத்தியல் பற்றோ துளிக்கூட இருப்பதில்லை. மாறாக, சினிமாக்காரனை அடித்தால் கிடைக்கிற பப்ளிசிட்டிக்கு அலைபவர்களாகவே இருக்கிறார்கள். கடைசியில் கிடைத்ததை வாங்கிக் கொள்ளவும்
சிலர் இதுபோன்ற செயல்களை செய்பவர்களாக இருக்கிறார்கள்.

“விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது.. அதிகாரத் திமிர.. பணக்கார பவர” இதிலென்னத் தவறிருக்கிறது?. இப்போதிருக்கும் சூழல் இதுதானே. கடலுக்குள் காணாமல் போன மீனவனை தேடுவது
முக்கியமாய்ப் படாமல், நூற்றாண்டு விழா கொண்டாட்டமே பிரதானமாய்ப் போன அதிகாரத்தை யார் மெச்சுவார் இங்கே? சிந்திக்க வேண்டாமா?. அது சரி குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தானே?.