அதிமுக கட்சி, பெயர், சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி பயன்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து டிடிவி தினகரன் அணி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்திவருகிறது.
இதற்கிடையே ஆர் கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ந்தேதி நடைபெறுவதையொட்டியும் டிடிவி தினகரன் அணி தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. நெருக்கடியான இந்த கால கட்டத்தை சமாளிப்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வது குறித்தும் டிடிவி தினகரன் அனைத்து மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
இதற்காக இன்று மாலை 6 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக டிடிவி தினகரன் இன்று மதியம் திருச்சி வருகிறார்.
அதன் பிறகு 52 மாவட்ட செயலாளர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை நடத்துகிறார். அப்போது இரட்டை இலை சின்னம் மீண்டும் பெறுவதற்காக தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சி வளர்ச்சி பணிகள், ஆர் கே நகர் இடைத்தேர்தல், பிரசாரம், நெருக்கடிகளை எதிர்கொள்வது தொடர்பாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கள நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் கே நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
திமுக தனது வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்ட மருதுகணேஷை அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுவாரா? அல்லது வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து அதிமுக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடுகிறது. தீபா போட்டியிடுவதில் கேள்வியெழுந்துள்ளது. இந்த சாதக பாதக அம்சங்கள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இதற்கிடையே கட்சி பொதுக்கூட்டங்களுக்கு சிறந்த பேச்சாளர்களை தயார் செய்வது, இடைத்தேர்தல் பிரசார களத்தில் டிடிவி அணி பொதுமக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் விவாதங்கள், எதிர்கட்சிகள் பிரசாரத்திற்கு பதில் கொடுக்கும் விதம் குறித்தும் டிடிவி தினகரன் அணி பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியும் திருச்சி பெமினா ஓட்டலில் இன்று காலை நடைபெற்று வருகிறது.
கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் டிடிவி தினகரன் அணி பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
திருச்சியில் டிடிவி தினகரன் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை திருச்சியில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.