full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இரட்டை இலையைக் கைப்பற்ற லஞ்சம், டிடிவி தினகரன் கைது

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக சுகேசுக்கு ரூ.10 கோடியை தினகரன் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் அளித்த சம்மனை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் 4 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி குற்றவியல் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தினகரனுக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.

முன்னதாக 4-வது நாளான நேற்று டெல்லி போலீசார் தினகரனிடம் சுமார் 7 மணி நேர விசாரணைக்கு பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.