அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பதவியில் செயல்பட இயலாது என அக்கட்சியின் தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக தினகரன் பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி தினகரன், “என்னை நீக்கியதாக வெளியான தீர்மானத்தில் வெறும் அதிமுக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி அதிமுக (அம்மா) என்று தான் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதுவே விதிமீறல், எனவே அந்த தீர்மானம் செல்லாது. தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியிழக்க நேரிடும்.
சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சிப் பணத்தை கையாளும் போது, நான் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட எப்படி தடை விதிக்க முடியும். எனவே, நான் செயல்பட எந்த தடையும் இல்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தில் தொப்பி சின்னம், கட்சியின் பெயர் ஆகியவை பெறும் போது என்னை துணைப் பொதுச்செயலாளராக அங்கீகரித்தவர்கள் இவர்கள் தானே, இப்போது ஏன் மறுக்கிறார்கள்?.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பணியில் உள்ளேன். பதவியில் இருக்கிற வரை கிடைத்ததை சுருட்டிக்கொண்டு செல்ல தீர்க்கமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மடியில் கனம் இருப்பதால் பயம் இருக்கிறது.
கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு.” என்று தெரிவித்தார்.