full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எனக்கு இதுவரை ஆதரவு அளித்த நிர்வாகிகள் – தொண்டர்களுக்கு நன்றி: டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கட்சியில் தினகரன் குடும்பத்தினரின் தலையீடு இருப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை என்பதால், கட்சியின் நலன் கருதி இந்த முடிவினை எடுத்திருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அதேசமயம், தினகரனுக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் இந்த முடிவினை கண்டித்தனர்.

அதன்பின்னர் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தன்னை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக எடுத்த முடிவிற்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், நான் ஒதுங்கி இருப்பதால் நன்மை நடப்பதாக இருந்தால் நடக்கட்டும் என்று கூறிய அவர், நேற்றே ஒதுங்கிவிட்டதாகவும் சண்டை போட்டு கட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், தினகரன் தனது கருத்துக்களையும், தொண்டர்களுக்கு ஆலோசனைகளையும் டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

“இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்க சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது. நான் ஒதுங்கி இருப்பதனால் கட்சிக்கு நன்மை என்றால் ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை என நினைக்கக்கூடிய முதிர்ச்சி உள்ளவன்.

கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு நான் என்றும் காரணமாக இருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்த காரணத்தை கொண்டும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்.

எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என தினகரன் தெரிவித்துள்ளார்.