சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெங்களூரு சென்ற டிடிவி தினகரன் இன்று பிற்பகலில் சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் புகழேந்தியின் வழக்கறிஞர் அசோகனும் சென்றனர்.
பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களிடம், “99 சதவீத தொண்டர்கள் சசிகலாவிடம்தான் உள்ளனர். அணி மாறிய எம்பிக்கள் என்னிடம் கூறிவிட்டே சென்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே ஆர்.கே.நகர் தேர்தல் எங்களுக்கு வாய்ப்பாக உள்ளது; ஆர்.கே.நகர் தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் மட்டுமே நேரடி போட்டி; மக்கள் விரும்பாத ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது, ஆர்.கே.நகரில் அது பிரதிபலிக்கும். இரட்டை இலையை எதிர்த்து சிலர் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு; ஆர்.கே.நகர் பொதுமக்கள் நியாயம் வழங்குவார்கள்.தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுப் பெறுவோம்.” என்று கூறினார்.