தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணி மற்றும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி போராட்டத்தின் 100 வது நாளில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தால் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆவது நாளான நேற்று அரசு பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. ஆனாலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது
இதனிடயே இந்த சம்பவங்களுக்கு பிறகு இன்று தூத்துக்குடி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி நகர் பகுதியில் வழக்கம் போல் தேனீர் கடைகள், உணவகங்கள், பழக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நகர, புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தூத்துக்குடியிலிருந்து பேருந்துகளின் இயக்கம் தொடங்கின.
இந்நிலையில் அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.