full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்

உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது.

ஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.

இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த 7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச மாதாந்திர திரைப்பட விழா, கொலம்பியா சினிமே லேப் மற்றும் இரானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலிலும் கயிறு திரைப்படம் இடம்பெற்றது.

அதுமட்டுமல்ல. இங்கிலாந்து, நஜீரியா தொடங்கி அமெரிக்கா வரை, இப்படம் லண்டன் சர்வதேச திரை விருது விழா, மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலபோ சர்வதேச இசை மற்றும் திரைப்பட விழா  மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற மாண்ட்கோமெரி சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பெரும் திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பிடித்தது.

சுருக்கமாக, இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் தன்னுடைய முத்திரையை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்த பிறகு தற்போது அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த தமிழ் ரசிகர்களின் இதயங்களை வெல்ல வந்திருக்கிறது.

‘கயிறு’ இயக்குநர் கணேஷ் தமிழ் சினிமாவுக்கு புதியவர் அல்ல. விஜய் ஷாலினி நடிப்பில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான  ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’ ஆகிய படங்களின் இணை இயக்குநர். இது தவிர கண்ணுக்குள் நிலவு மற்றும் ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களின் இயக்கத்திலும் கணேஷ் பணியாற்றியுள்ளார்.

கயிறு திரைப்படம் இத்தனை விருதுகள் வாங்க காரணம் என்ன?

இது குறித்து இயக்குநர் கணேஷ் கூறியிருப்பதாவது:

தமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் அது போற்றி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துக்கிறது. என் படத்தின் கதை தினமும் காலையில் ஒரு இளம் காளை மாட்டுடன் வீடு வீடாக சென்று குறி சொல்லும் ஒரு பூம் பூம் மாட்டுக்காரனை பற்றியது. அவனுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது. அப்பெண்ணை திருமணம் செய்யவேண்டுமென்றால் தன்னுடைய தொழிலை விடவேண்டும் என்கிற சூழலுக்கு அவன் தள்ளப்படுகிறான். தான் மிகவும் விரும்பும் காளை மாட்டையும் அவன் இழக்க வேண்டும். இழக்கவேண்டியது அவன் தொழிலை மட்டுமல்ல, தன் தந்தை வழியாக தன்னிடம் வந்த பாரம்பரியத்தையும் தான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் நம் கலாச்சாரத்தின் ஒரு பழக்கவழக்கத்தை விட வேண்டும். இவை அனைத்தும் அவனை ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளுகிறது. அதன் பிறகு அவன் என்ன செய்கிறான் என்பதே கதை. இப்படம் நம் கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதை பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக விலங்குகளிடம் அன்பாக இருப்பதன் தேவை குறித்தும் பேசுகிறது.

என் படம் மூலமாக சில பொருத்தமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறேன். நமது கலாச்சாரம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷம் என்பதை அழுத்தமாக கூறியுள்ளேன். அதை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை மாற்றவேண்டும் என்பதையும்ம் இப்படம் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது. மிக முக்கியமாக விலங்குகளும் பறவைகளும் தாங்கள் உயிர்பிழைத்திருக்க மனிதர்களை சார்ந்திருக்கிறது. நாம் அவற்றை துன்புறுத்த கூடாது. மாறாக, நாம் அவற்றின் மீது அன்பையும் கனிவையும் காட்டவேண்டும்.

இப்படம் பல்வேறு சமூக கருத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது, அனைத்து வகையான ரசிகர்களும் ரசிக்கும்படியான படமாகவும் இது இருக்கும். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மார்ச் 1- அன்று கனடாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மார்ச் 13 இப்படம் வெளியாகும்.