கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ் லீ. அவரது படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அவரைப் போன்ற ஒரு வீரன், கலைஞன், நடிகன் உலகத்தில் இன்னமும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதும் இல்லை என்னும் அளவுக்கு தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கிறார் புரூஸ்லீ. அதாவது அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில், குங்பூ கலையில் வல்லவரான புரூஸ்லியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக இருக்கிறது.
புரூஸ் லீ மறைந்து 44 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சேகர் கபூர் `லிட்டில் டிராகன்’ என்ற பெயரில் இயக்க இருக்கிறார். சேகர் கபூர் கமல் இயக்கத்தில் `விஸ்வரூபம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை புரூஸ் லீ-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான “புரூஸ் லீ என்டர்டெயின்ட்மெண்ட்” தயாரிக்க உள்ளதாக அந்நிறுவன உரிமையாளரும், புரூஸ் லீ-யின் மகளுமான ஷனான் லீ அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கான கதையை எழுதுவதிலும் ஷனான் லீ தனது பங்களிப்பை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாலிவுட்டில் மற்றொரு பிரபல இயக்குநர், சர்ச்சைக்கு பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. அவர், புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாற்றை அவரது பக்தனான என்னால் மட்டுமே முழுமையாக எடுக்க முடியும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதற்காக நான், சேகர் கபூருக்கு எதிரானவன் என்று நினைக்க வேண்டாம் என்று கூறிய ராம் கோபால் வர்மா, புரூஸ் லீ குறித்து, அவரது மனைவி லிண்டா லீ, மகள் ஷனான் லீயை விட தனக்கே அதிகமாக தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றை லிட்டில் டிராகனுக்கு போட்டியா வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
எனவே புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு இரண்டு பிரம்மாண்ட இயக்குநர்களால் இரு விதமான பரிணாமங்களில் வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.