உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற படம் வருகிற 11-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனையொட்டி இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முன்னோட்ட காட்சிகளில் ரசிகர்கள் முன் தோன்றி வருகிறார்கள். நேற்று இந்த குழுவினர் திருச்சிக்கு வந்தனர்.
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இது எனக்கு ஒன்பதாவது படம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் நான் ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறேன். அத்துடன் வெளி நிறுவனங்களின் தயாரிப்பில் முதன் முதலாக நடித்துள்ளேன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்.
கூவத்தூர் சம்பவம் பற்றி ஆந்திராவில் தெலுங்கு படம் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுபோன்ற படங்களில் நடிப்பீர்களா? என்றும் கேட்கிறீர்கள். என்னைப்பொறுத்தவரை நல்ல கதையம்சம் உள்ள அரசியல் தொடர்பான படங்களிலும் நடிப்பேன் என தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
இந்த படத்தின் கதாநாயகி நிவேதா, “நான் மதுரையை சேர்ந்த தமிழ்ப்பெண். நான் 14 வருடங்கள் துபாயில் இருந்து விட்டு வந்து இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம்’ என்றார்.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், “உதய நிதி ஸ்டாலின் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் எந்த வித பந்தாவும் இன்றி எப்போதும் இயல்பாக இருக்க கூடியவர். எதற்காகவும் அவர் நடிக்க மாட்டார். இயல்பாக தான் நடிப்பார். இந்த படத்தில் ஊத்துக்காட்டான் என்ற பாத்திரத்தில் கதாநாயகி நிவேதாவுக்கு அப்பாவாக நடிக்கிறேன். நான் எந்த படத்தில் நடித்தாலும் கதையை தான் பார்ப்பேனே தவிர கதாநாயகனா, வில்லனா என்றெல்லாம் பார்ப்பது கிடையாது’ என்றார்.
பேட்டியின்போது இந்த படத்தின் இயக்குனர் தளபதி பிரபு, நடிகர் சூரி, வினியோகஸ்தர் ஜி.தியாகராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர்.