full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

உதய நிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பை கதை’

ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில்  நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும்  ‘ஒரு குப்பை கதை’! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
 
மாஸ்டர் தினேஷ்!
 
கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில  நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர்.  தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர்.
 
ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் முறையாக இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். 
 
தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். 
 
நல்ல கதைக்கு ‘ஒரு குப்பை கதை’ எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் இருவரும். ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என  முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன் இந்த தலைப்பே சரி என சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, படம் பார்த்த பிரபலம் ஒருவர் வியந்து பாராட்டி வெளியிடவும் சம்மதம் சொல்லியுள்ளார். ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் அஸ்லம்.
 
இதுகுறித்து தயாரிப்பாளர் அஸ்லமிடம் கேட்டபோது,  “சார், படம் தயாராக உள்ளது, தாங்கள் பார்க்க முடியுமா?’ என்று மைனாவை தனது ஒரே வார்த்தையின் மூலம் உலகம் முழுக்க பார்க்க வைத்த உதய நிதி ஸ்டாலினிடம் கேட்டேன். நல்ல படங்களின் மேல் அக்கறையுள்ள அவர், சமீபமாக தனது படம் தவிர வேறெந்த படத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்தார். எங்கே  நம்ம படத்தை பார்க்கப் போகிறார்? என  நினைத்தேன். ஆனால், உடனடியாக நேரம் ஒதுக்கி  படம் பார்த்தவர்,  பெரிதும் பாராட்டினார். 
 
“படம் அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசுகிறது. இக்காலகட்டத்தில் இது போன்ற படம் அவசியம் எனக் குறிப்பிட்டவர்,  டான்ஸ் மாஸ்டர்  தினேஷ் -க்குள் ஒரு மிகச் சிறந்த நடிகன் ஒளிந்திருப்பதை, தான்  படம் பார்த்தபோது உணர்ந்ததாக மனம் திறந்து பாராட்டினார். அவரே தன்னுடைய நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் ‘ஒரு குப்பை கதை’ படத்தை வெளியிட சம்மதமும் தெரிவித்துள்ளார். ஒரு தரமான படத்தைத் தயாரித்ததற்காக என்னையும், இயக்குநரையும்  வெகுவாகப் பாராட்டினார் உதயநிதி ஸ்டாலின்,” என்றார் தயாரிப்பாளர் அஸ்லம்.  
 
‘ஒரு குப்பை கதை’ திரைப்படம் ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக பாகன் பட  இயக்குநர் அஸ்லம், என் அரவிந்தன், ராமதாஸ்  ஆகியோர் தயாரித்துள்ளனர்.
 
காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராகவும் ‘பாகன்’ படத்தில் அஸ்லமிடம் இணை இயக்குநராகவும பணிபுரிந்தவர்.
 
மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவிலும்,  நா.முத்துக்குமார் பாடல் வரிகளிலும்,  ஜோஸ்வா ஸ்ரீதர் இசையிலும்,  கோபிகிருஷ்ணா எடிட்டிங்கிலும் உருவான ‘ஒரு குப்பை கதை’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
 
தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ்  நடித்துள்ளார். இவர் ‘வழக்கு எண்18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’,  ‘ஜன்னல் ஓரம்’,  ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் என்ற இரு புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள்.
 
யோகி பாபு,  ஜார்ஜ்  படத்தின் மிக முக்கியமான திருப்பமாக வருகிறார்கள்.  ஆதிரா அம்மாவாக  நடித்துள்ளார்.