2022 – 2024 ஆண்டுக்கான இயக்குநர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆசியுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் 30 பேர் குழு பங்கு கொள்கிறது. இவர்களின் அறிமுக விழா இன்று பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் வரவேற்புரை அளித்த மங்கை அரிராஜன் பேசியதாவது…
இமயம் அணி என்றாலே அனைவருக்கும் தெரியும், இது இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆசி பெற்ற அணி. தலைவர் பாக்யராஜ் தலைமையிலான அணி. இது கண்டிப்பாக வெற்றி பெறும். இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவரையும் இயக்குநர் R.சுந்தர்ராஜன் அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தார்.
இமயம் அணி சார்பில்
K.பாக்யராஜ் – தலைவர்
ரா. பார்த்திபன் – செயலாளர்
வெங்கட் பிரபு – பொருளாளர் பதவிகளுக்கு போடியிடுகிறார்கள்
இணை செயலாளர் பதவிகளுக்கு,
A.ஜெகதீசன், R.ஜெனிஃபர் ஜீலியட், ராஜாகார்த்திக் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு,
மங்கை அரிராஜன், பாலசேகரன், K.P.ஜெகன், நாகேந்திரன், KBB.நவீன், R.பாண்டியராஜன், வி. பிரபாகர், சசி, R.ஷிபி, S.S.ஸ்டேன்லி, சாய் ரமணி, வேல்முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த அணியிலிருந்து துணைத் தலைவர்கள் பதவிக்கு…
R.மாதேஷ், எழில் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
இயக்குநர் K.பாக்யராஜ் பேசியதாவது….
எங்கள் இமயம் அணி இன்று அறிமுகமாவது மகிழ்ச்சி. பத்திரிக்கை நண்பர்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு இருப்பது மகிழ்ச்சி. உதவி இயக்குநர்களுக்கு, இயக்குநர்களுக்கு என்னென்ன சிக்கல்கள் கஷ்டங்கள் உள்ளது என குழுவாக விவாதித்தே இந்த வாக்குறுதி அறிக்கையை உருவாக்கினோம். பெயருக்காக இல்லாமல் வெற்றி பெற்றவுடன் இதில் அறிவித்துள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்ற, முழுமையான அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜெகன் பேசியதில் ஒன்றை மறுக்கிறேன். இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது என்றார். ஆனால் நாங்கள் இங்கு ஜெயிக்க தான் வந்திருக்கிறோம். நல்லது செய்யத்தான் வந்துள்ளோம், நாங்கள் பெரிய வாக்குறுதிகள் தரவில்லை, மீன் பிடிக்க தூண்டில் மட்டுமே தருவோம் பிழைத்து கொள்வது உங்கள் சாமர்த்தியம், யாரையும் குற்றம் சொல்ல வரவில்லை, நாங்கள் நல்லது செய்ய வந்திருக்கிறோம். தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த போது செல்வமணி உடன் போட்டியிட வேண்டாம் என பலர் பயமுறுத்தினார்கள், ஆனால் எல்லாவற்றையும் சந்திக்க முடிவு பண்ணியே இறங்கியுள்ளேன். சர்க்கார் விசயத்தில் ராஜேந்திரன் யாரென்றே தெரியாது, ஆனால் அவர் வந்து பிரச்சனை என்று சொன்னபோது குழுவில் இருக்கும் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்தேன். முருகதாஸையே வீட்டுக்கு கூப்பிட்டு பேசியபிறகு, செல்வமணி அது வேற கதை இது வேற கதை என்றார் அங்குதான் எனக்கும் அவருக்கும் முதல் பிரச்சனை ஆரம்பித்தது. அந்த பிரச்சனையில் செல்வமணி போர்ஜரி செய்தார், நான் எடுத்த நடவடிக்கையில் பிறகு காம்ப்ரமைஸ் ஆனார்கள். நான் இருந்த சங்கத்திலேயே அவரால் போர்ஜரி நடத்த முடிகிறது எனும் போது, அவர் தலைவராக இருக்கும் சங்கத்தில் என்னென்ன செய்திருப்பார் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். இந்த தேர்தலில் கண்டிப்பாக எங்கள் அணி ஜெயிக்கும். எங்களுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
பின்னர் இமயம் அணி சார்பிலான 18 வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பத்திரிக்கை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார்.
வேட்பாளர்களை வாழ்த்தி இயக்குநர் செந்தில்நாதன் பேசியதாவது…
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆசி பெற்று தலைவர் பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஒரு சங்கம் என்பது அனைவருக்கும் சம உரிமையை தருவது, ஆனால் ஒரு குழு மட்டுமே அமர்ந்து கொண்டு நாங்களே இருப்போம் என்பது என்ன மாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை. ஒரு குழு மட்டும் தான் நல்லது செய்ய வேண்டுமா? வேறு யாரும் வரக்கூடாதா?, இயக்குநராக ஆசைப்பட்டு நிறைய பேர் லட்சியத்தோடு ஊரிலிருந்து வந்தவர்கள் லட்சியத்தை மறந்து சாப்பாட்டுக்காக வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். இந்த பதவியில் அவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இது மாற வேண்டும். நீங்கள் ஜெயித்து வந்து நல்லது செய்ய வேண்டும். கண்டிப்பாக இவர்கள் தான் ஜெயிப்பார்கள் வெற்றி மேடையில் நான் இருப்பேன் என வாழ்த்துகிறேன் நன்றி.
இயக்குநர் சங்க துணை தலைவர் R.மாதேஷ் பேசியதாவது…
போட்டி போட்டு ஜெயித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் என்னை போட்டியின்றி தேர்ந்தெடுத்து விட்டார்கள். சங்கத்தில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால் போட்டியிட்டதில்லை. கஷ்டப்படும் ஒவ்வொரு உதவி இயக்குநர்களுக்கும் உதவுகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளனர் அதற்காகவாவது இந்த அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த அணி கண்டிப்பாக ஜெயிக்கும் நன்றி.
இயக்குநர் சாய் ரமணி பேசியதாவது..
எழுத்தாளர் சங்கத்தில் பாக்யராஜ் சாருடன் சில ஆண்டுகளாக பயணித்து கொண்டிருக்கிறேன். அந்த சங்கம் இருந்த நிலையை மாற்றி நல்ல நிலைக்கு கொண்டுவந்துள்ளார். ஓட்டே இல்லாதவர்கள் கருத்து சொன்னாலும் அவர்களை அழைத்து பிரச்சனைகளை கேட்டு தீர்த்துள்ளார். பெரிய நடிகர், பெரிய நிறுவனத்திற்கு எதிராக போராடி ஒரு அசோஸியேட்டுக்கு நியாயம் வாங்கி தந்தார். தனக்கான ஒரு பொறுப்பை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அவருடன் இருந்து பார்த்தவன் என்ற முறையில், அவர் வந்தால் இயக்குநர் சங்கம் இன்னும் வளப்படும். அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார். சங்கத்தை சிறப்பாக முன்னெடுப்பார். இந்த இமயம் அணி கண்டிப்பாக வெற்றி பெறும்
இயக்குநர் ஜெகன் பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது 10 ஆண்டுகளாக இந்த சங்கத்தில் இருக்கிறேன், ஒரு வேட்பாளர் அறிமுகம் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடக்கிறது. எங்கள் சங்கம் மிகவும் பின் தங்கி இருக்கிறது. சங்கம் பற்றி சமூக வலைதளங்களில் பேசினால் தகுதி நீக்கம் என ஒரு சட்டம் உள்ளது. பத்திரிகைகளை சந்திக்கவே கூடாது என சொல்வது சர்வாதிகாரம், இந்த விதிமுறையை மீறி உங்கள் முன்னிலையில் இந்த நிகழ்வை நடத்தும் தலைவருக்கு நன்றி. பாக்யராஜ் எதற்கும் துணிந்தவர். இங்கு வேலை பார்ப்பவர்கள் 75 சதவீதம் மெம்பராக இல்லாதவர்கள், இதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. எதிரணியில் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள் ஆனால் வேறு யாருமே நன்றாக வேலை செய்ய மாட்டார்கள் என ஏன் நினைக்கிறீர்கள், இது மாற வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன் ஒரு அறிக்கையை சமர்பிப்பார் செல்வமணி ஆனால் தேர்தலுக்கு பின் அவையெல்லாம் காணாமல் போய் விடும், என்ன நாடகம் இது என்று தெரியவில்லை. தேர்தல் என்றால் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும், இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது. எங்கள் அணி சார்பாக அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி.