உள்குத்து – விமர்சனம்!

Reviews

“திருடன் போலிஸ்” படத்தின் கூட்டணி தினேஷ்-கார்த்திக் ராஜு-பால சரவணன் மீண்டும் இணைந்திருக்கும் “உள்குத்து” அப்படியும் இப்படியுமாய் பயணிக்கிறது. இது நல்ல படமா? சுமாராண படமா?
மொக்கை படமா? என கணிக்க முடியாமல் இருப்பதால் படம் தப்பிக்கிறது.

திருடன் போலீஸ் படத்திலிருந்து நிறைய மிஸ்ஸிங் இந்தப் படத்தில். அதில் இருந்த எதார்த்தம் இந்தப் படத்தில் இல்லையோ? என்று என்னத் தோன்றுகிறது.

கடற்புறத்தில் படமாக்கியிருக்கிறார்கள் என்பதைத் தாண்டி படத்தில் மீனவர் சம்பந்தப்பட்ட எந்த சாயலுமே இல்லை. அதேபோல் கந்துவட்டி பற்றிய முழுமையான காட்சிப்படுத்துதலும் இல்லை.
ஆகவே ட்ரைலரில் இருந்து நாம் எதிர்பார்த்துப் போன இந்த இரண்டு தளத்திலுமே படம் பயணிக்கவில்லை. மாறாக அக்கா – தம்பி, நட்பு என பழிவாங்கல் கதையாக மாறுகிறது.

படத்தின் ப்ளஸ் பால சரவணன். அவர் தினேஷால் படும் அவஸ்தைகள் தியேட்டரை குலுங்கி சிரிக்கிறது. அடுத்தது தினேஷ், திருடன் போலிஸ், விசாரணை படங்களில் பார்த்த அதே உடல்மொழியுடனே
இதிலும் வருகிறார். அதிகம் பேசாமல் ஆக்‌ஷனில் தெறி காட்டுகிறார். நிஜமாகவே தினேஷை ரசிக்கலாம்.

திலீப் சுப்புராயன், ஜான் விஜய் ஆகியோரைக் காட்டிலும் ஸ்ரீமன் பெர்ஃபார்மன்சில் ஸ்கோர் செய்கிறார். அவரது அனுபவம், படத்தின் முக்கியமான காட்சியொன்றில் தத்ரூபமாக வந்திருக்கிறது.

படத்தை கெடுத்து வைத்திருப்பவர் வில்லன் சரத் லோகிதஸ்வா. அவருடைய முக பாவணைக்கும், அந்த டப்பிங் வாய்ஸ்க்கும் பொருந்தவே இல்லை. அதிலும் அந்த பழைய சாதம் சாப்பிடும் போது அழுதுகொண்டே பேசுவதெல்லாம் முகம் சுழிக்கும் படிதான் இருக்கிறது. தயவு செய்து தமிழ் சினிமா எடுக்கும் இயக்குநர்கள் தமிழ் பேசத்தெரிந்த வில்லன்களையோ, அல்லது குறைந்தபட்சம் வசனங்களைப் புரிந்துகொண்டு
நடிக்கும் நடிகர்களையோ பயண்படுத்த முன்வர வேண்டும்.

நாயகி நந்திதாவிற்கு அதிக வேலையே இல்லை. பாடல்களுக்காகவும், ஹீரோவிடம் ஃப்ளாஸ்பேக்கை சொல்ல வைப்பதற்கு மட்டுமே வந்து போகிறார். அவரது காதலால் எந்த தாக்கமும் இல்லை படத்தில்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் மெலடி ட்ரீட். பின்னணி இசை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். வர்மாவின் கேமரா, கடற்கரை பகுதிகளையும், அதை ஒட்டி உள்ள பகுதிகளையும் மிகவும் அழகாக காட்டிருக்கிறது.

முதல் பாதி சரசரவென அடுத்தடுத்து சஸ்பென்ஸோடு நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் நொண்டியடிக்கிறது.

படத்தின் க்ளைமாக்ஸில் கார்த்திக் ராஜு தனது முத்திரையை பதிக்கிறார். அதீத எதிர்பார்ப்புகளை கழட்டி வைத்துவிட்டு பார்த்தால் “உள்குத்து” உங்களை ஏமாற்றாது.