கோபி நயினார் இயக்கத்தில் சமீபமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் “அறம்”. அனைத்து
தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சுனு லக்ஷ்மி, ராமச்சந்திரன், பழனி பட்டாளம் என
அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது தரமான இசையால் படத்தை உணர்வுப்
பூர்வமானதாக்கியிருப்பார்.
“அறம்” திரைப்படத்தின் வெற்றியில் பாடலாசிரியர் உமாதேவிக்கும் பங்குண்டு என்றே சொல்லலாம். தனது ஆழமான, உணர்வுப்
பூர்வமான வரிகளின் மூலம் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களிமே காண்போரையும், கேட்போரையும் கலங்க
வைத்திருப்பார் உமாதேவி. “தோரணம் ஆயிரம்” மற்றும் “புது வரலறே.. புறநானூறே” ஆகிய பாடல்கள் தான் அவை.
இதுமட்டுமல்லாமல் இணையத்தில் வெளிவராமல், திரையில் மட்டுமே ஒலிக்கும் ஒரு பாடல் குறித்து உமதேவி உருக்கமான உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். வார இதழ் ஒன்றிற்கு அவரளித்துள்ள பேட்டியில்,
“படத்தின் க்ளைமாக்ஸில் ஒரு காட்சி வரும்.. ‘குழந்தை செத்துப் போயிடும்… ஐந்து லட்சம் ரெடி பண்ணு’ என்று அரசியல்வாதி ஒருவர் சொல்வார். குழிக்குள் இருக்கும் குழந்தையை மண்ணைப்போட்டு மூடிவிட்டுப்போக நினைப்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்தக் குழந்தையை மண்ணைப்போட்டு மூடவேண்டும் என்று எண்ணும் அந்த மனநிலை, மனநோய்தான் அரியலூர் மாணவியான அனிதாவைக் கொன்றது. அந்தக் குழிக்குள் இருக்கும் சிறுமிக்கும், அனிதாவுக்கும் வித்தியாசமே கிடையாது. இரண்டுமே அதிகாரவர்க்கத்தின் கையாலாகாத்தனம்தான். குழிக்குள் இருந்த குழந்தையை மீட்டுவிட்டோம்; அனிதாவை விட்டுவிட்டோம். அனிதாவை மனதில் நிறுத்தி எழுதியதுதான் க்ளைமாக்ஸில் வரும், ‘நெரிக்கும் கரங்கள் உனது நேசங்களே… எனை ஆளும் தேசமே’ என்னும் பாடல். அனிதாவின் போராட்டம் பற்றி, ‘கண்களை எரிக்கலாம்; கனவு எரியுமோ… தலைமுறைக் கனவுகள் உனக்குப் புரியுமோ…’ என்று ஒரு பாடல் எழுதினேன். இந்தப் பாடலை நள்ளிரவு 1.30 மணிக்கு எழுதி முடித்தேன்; எழுதி முடித்ததும் கதறி அழுதேன்; மிகமிகத் துயரத்தோடு இந்தப் பாடலை எழுதினேன்” என்று கூறிவிட்டு அப்போதும் கண் கலங்கியிருக்கிறார்.
சமூகத்தின் மீதும், எளிய மக்களின் மீதும் உண்மையான நேசம் கொண்டுள்ள கவிஞர்களும், கலைஞர்களும் மதிப்பிற்குறியவர்கள் தான். அந்த வகையில் உமாதேவியின் கண்ணீர் சமூகத்தின் மீதுள்ள அவரது நேசத்தை பறைசாற்றும்!!